பிரான்ஸை உலுக்கிய ‘வீ ஷேர்’ (Vie chère) 3-ஆம் கட்டப் போராட்டம்! வீதிகளில் இறங்கிய 150,000 மக்கள்! கண்ணீர்ப்புகை, பதற்றம், மோதல்களுடன் தொடரும் மாபெரும் முற்றுகை!
பிரான்ஸ் முழுவதும் இன்று (31.10.2026) ‘வீ ஷேர்’ (Vie chère – உயிர் வாழும் செலவின உயர்வு) எதிர்ப்பின் மூன்றாம் கட்டப் போராட்டம் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் பாரிஸ் உட்பட தேசத்தின் பல முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். ‘அலோவீன்’ (Halloween) திருவிழா நாளான இன்று, மாலையில் பெருமளவு வன்முறைகள் வெடிக்கலாம் என்ற உள்துறை அமைச்சகத்தின் தீவிர எச்சரிக்கைக்கு மத்தியில், நாடு முழுவதும் சுமார் 70,000 காவல்துறையினர் மற்றும் ஆயுதப்படையினர் குவிக்கப்பட்டு, நாடு ஒரு முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்றைய மாலை நேரக் கள நிலவரங்களை நாம் முழுமையாகத் தொகுத்து வழங்குகிறோம் .
தலைநகர் பாரிஸின் அதிர்வலைகள்: 150,000 பேர் அணிவகுப்பு!
பாரிஸில் மதியம் 14:00 மணியளவில் ‘போர்த் த பாஞ்ஞோலே’ (Porte de Bagnolet) பகுதியிலிருந்து தொடங்கிய இந்தப் பிரம்மாண்டப் பேரணியில் சுமார் 70,000 பேர் பங்கேற்றதாகப் பாரிஸ் காவல்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் தொழில் சங்கத்தினர் 150,000 பேர் என்கின்றனர் ;பேரணிக்குச் செல்லும் நிலத்தடித் தொடருந்துப் பாதையான Ligne 3 மக்கள் வெள்ளத்தால் முற்றிலுமாக நிரம்பி வழிய, மக்கள் பேரணியில் இணைவதற்கே பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
தெளிவான நீல வானத்தின் கீழ், 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தொடங்கிய இந்தப் பேரணியில், ‘லா பிரான்ஸ் என்சுமீஸ்’ (La France Insoumise – அடிபணிய பிரான்ஸ் ) கட்சியின் தலைவரும் அதிபர் வேட்பாளருமான ஜோன்-லுக் மேலான்ஷோன் (Jean-Luc Mélenchon), நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரீமா ஹாஸான் (Rima Hassan), தோமா போர்த் (Thomas Portes), மனோன் ஓப்ரீ (Manon Aubry) ஆகியோருடன் நேரடியாகக் களமிறங்கினார். அலோவீன் தினத்தை முன்னிட்டு ஸ்பைடர்மேன், மரியோ, ஃபிராங்கண்ஸ்டைன் எனப் பல்வேறு வேடமணிந்த போராட்டக்காரர்கள், “வாழ்க்கையை ஈட்டுவதற்காகவே வாழ்வைக் கழிக்க விரும்பவில்லை” மற்றும் “காவல்துறைத் தடியடிகள் வேண்டாம், பட்டப்படிப்பே வேண்டும்” போன்ற பதாகைகளை ஏந்திச் சென்றனர். பாஸ்தீய் (Bastille) அருகே ‘ரியூ து போபூர்க் சாந்த்-அந்தோன்’ (Rue du Faubourg Saint-Antoine) வீதியில் சர்ச்சைக்குரிய சட்டத்தரணி ஜோன் பிராங்கோவின் முகம் பொறிக்கப்பட்ட ‘பிராங்கோ 2027’ (Branco 2027) என்ற பேருந்தும் நகரை வலம் வந்ததைக் காண முடிந்தது.
காவல்துறையின் இரும்புக்கரம்: நாடாளுமன்றத்தின் முன் கவச வாகனங்கள்!
வன்முறைகளைத் தடுக்கும் பொருட்டு, பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் (- Assemblée nationale) அருகே ராணுவத்தின் கவச வாகனங்கள் முன்கூட்டியே தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. அத்தோடு, ‘பாஸ்தீ’ (Bastille) சதுக்கத்தில் போராட்டக்காரர்கள் கூடுவதற்குக் உயர் நீதிமன்றம் (Conseil d’État) பிறப்பித்த உத்தரவின்படி கடுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது. தடையை மீறி வந்தவர்களைக் காவல்துறையினர் உடனுக்குடன் சோதனையிட்டு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துத் திருப்பி அனுப்பினர். வானில் தொடர்ந்து காவல் உலங்கூர்திகள் வட்டமிட்டவாறே கண்காணிப்பில் ஈடுபட்டன. அதிதீவிரப் படையினரான BRI, Raid, மற்றும் GIGN ஆகியோரும் எந்நேரமும் களமிறங்கத் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். மதியம் 14:00 மணி நிலவரப்படி 27 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டிருந்தனர் (கடந்த வாரம் இதே நேரத்தில் 217 பேர் கைதாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது).
கலைந்து செல்லும்போது வெடித்த பதற்றம்!
மாலை 16:00 மணியளவில் பேரணியின் முன்வரிசை இலக்கான ‘போர்த் து ஷாரோந்தோன்’ (Porte de Charenton) பகுதியை அடைந்தது. ஆனால், 16:50 மணியளவில் பேரணி கலைந்து செல்லும் தருவாயில், சில வன்முறைக் கும்பல்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
இதற்கிடையே, ‘ரூ து லா ரொக்கெட்’ (Rue de la Roquette) பகுதியில் 200 பேர் கொண்ட தன்னிச்சையான போராட்டமும், ‘ரூ போப்பன்கூர்’ (Rue Popincourt) பகுதியில் உருவான மற்றொரு கூட்டமும் காவல்துறையினரால் உடனடியாகக் கலைக்கப்பட்டன. ‘சாக்ரே-கோர்’ (Sacré-Cœur) தேவாலயத்தின் அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அமைதியாக அமர்ந்து அறப்போராட்டத்தில் (sit-in) ஈடுபட்டனர். இன்று இரவு 20:00 மணிக்குத் தலைநகரின் மையப்பகுதியான ‘ஷாத்லே’ (Châtelet) பகுதியில் மீண்டும் ஒன்று திரளுமாறு போராட்டக்காரர்கள் மத்தியில் பதாகைகள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், காவல்துறையினர் தீவிர எச்சரிக்கை நிலையில் உள்ளனர்.
பிரான்ஸின் பிற நகரங்களில் வெடித்த மோதல்கள்:
பாரிஸ் மட்டுமன்றி பிரான்ஸின் பிற முக்கிய நகரங்களிலும் போராட்டங்கள் உக்கிரமாக நடைபெற்றன:
லியோங் (Lyon): சுமார் 17,000 பேர் திரண்ட இந்தப் பேரணியில், ‘ஜோன்-மாஸே’ (Jean-Macé) பகுதியில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துக் கண்ணீர்ப்புகை வீசப்பட்டது.
மார்செய் (Marseille): எந்தவித அதிகாரபூர்வ அனுமதியுமின்றி ‘லா கானபியேர்’ (La Canebière) அருகே திரண்ட மக்கள் கூட்டத்தின் மீது அதிவிரைவுப் படையினர் (CRS) தாக்குதல் நடாத்தினர். குப்பைகள் மற்றும் பொருட்கள் வீசப்பட்டதால் அங்கும் கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டது.
தூலூஸ் (Toulouse): போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், திரண்ட மக்கள் குப்பைத் தொட்டிகளுக்கும் கட்டுமானப் பலகைகளுக்கும் தீ வைத்தனர். முகமூடி அணிந்த இளைஞர்கள் வன்முறையில் இறங்கியதால் CRS படையினர் களமிறங்கிக் கூட்டத்தைக் கலைத்தனர்.
ரென் (Rennes): அமைதியாக நடந்து முடிந்த பேரணியின் முடிவில் ‘அவென்யூ ஜோன்-ஜான்வியே’ (Avenue Jean-Janvier) பகுதியில் பல நூறு பேர் காவல்துறையினர் மீது பொருட்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இவற்றைத் தவிர, போர்தோ (Bordeaux), மொன்பெலியே (Montpellier), லிமோஸ் (Limoges – 3,000 பேர்), மற்றும் நீஸ் (Nice – 2,400 பேர்) ஆகிய நகரங்களிலும் மக்கள் பெருமளவில் திரண்டனர். லீல் (Lille) நகரில் சூழலியல் கட்சியின் அதிபர் வேட்பாளர் மரீன் தொந்தெலியே (Marine Tondelier) நேரடியாகப் பங்கேற்றார்.
அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?
இந்தப் போராட்டங்கள் இத்துடன் ஓயப் போவதில்லை என்பதற்கான அறிகுறியாக, எதிர்வரும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நாடு முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை முடக்கும் போராட்டத்திற்கு மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. அதேவேளை, ‘மஞ்சள் ஆடை’ (Gilets jaunes) போராட்டக்காரர்கள் நவம்பர் மாத இறுதியில் ஒரு மாபெரும் ஒருங்கிணைப்பு மாநாட்டிற்குத் (assemblée des assemblées) திட்டமிட்டுள்ளனர்.
இன்றைய அலோவீன் இரவு, பாரிஸ் மற்றும் பிரான்ஸின் பெருநகர வீதிகளில் அமைதியாகக் கழியுமா அல்லது இருளில் கலவரங்கள் வெடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ‘sci’ செய்தி அறை தொடர்ந்து கள நிலவரங்களை உன்னிப்பாகக் கண்காணித்து உடனுக்குடன் வழங்கும்.