தெஹிவளையில் கைக்குண்டுத் தாக்குதல்: இருவர் கைது
இலங்கையின் தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்தக் கைக்குண்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
பொலிஸாரின் தகவலின்படி, செப்டம்பர் 11ஆம் திகதி அதிகாலை சுமார் 3 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள குறித்த வீட்டை இலக்குவைத்து கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளில், சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் சம்பவ இடத்துக்கு வந்துள்ளதாக பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் முன்கதவை சந்தேகநபர் தட்டிய பின்னர், வீட்டில் இருந்தவர்கள் கதவைத் திறந்தபோது, அவர் வீட்டுக்குள் கைக்குண்டை வீசியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அப்போது வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்களும் கைக்குண்டு வெடிப்பில் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தனர்.
இந்த வெடிப்பில் சிறுவர்களின் 55 வயதுடைய தந்தையின் காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், காயமடைந்த குறித்த நபருக்கு இதற்கு முன்னர் எந்தவொரு குற்றப் பதிவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைக்குண்டுத் தாக்குதலுக்கான காரணம், தாக்குதலின் பின்னணி மற்றும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு இந்த சம்பவத்துடன் உள்ள தொடர்பு குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.