பாரிஸில் (Paris) கடும் வெப்ப அலை நிலவி வரும் நிலையில், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். RATP-யின் அதிகாரப்பூர்வ தகவல்படி, பாரிஸ் மெட்ரோவில் (Paris Metro) சுமார் 50 சதவீத ரயில்கள் மட்டுமே குளிரூட்டப்பட்ட காற்றோட்ட வசதியுடன் (Ventilation réfrigérée) இயங்குகின்றன. குறிப்பாக, 1, 2, 5, 9, 11 மற்றும் 14 ஆகிய மெட்ரோ வழித்தடங்களில் இந்த வசதி முழுமையாக உள்ளது. மெட்ரோ 4-ஆவது வழித்தடத்தில் பகுதி அளவில் (31 ரயில்களில்) மட்டுமே இந்த வசதி உள்ள நிலையில், 10-ஆவது வழித்தடத்தில் புதிய MF19 ரயில்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், RER சேவைகளில் RER A முழுமையாகவும், RER B-யில் 84 சதவீத ரயில்களும் குளிரூட்டப்பட்ட வசதியைக் கொண்டுள்ளன. அதேபோல, RATP இயக்கும் அனைத்து ட்ராம்வே (Tramway) சேவைகளிலும் (T1 முதல் T8 வரை) இந்த வசதி முழுமையாக உள்ளது.
இருப்பினும், இது வழக்கமான குளிர்சாதன வசதி (Air Conditioning) அல்ல என்றும், வெளி வெப்பநிலையை விடச் சில டிகிரி குளிர்ச்சியான காற்றை மட்டுமே வழங்கும் தொழில்நுட்பம் என்றும் RATP விளக்கம் அளித்துள்ளது. இதனால் கடும் வெப்ப நேரங்களில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் தண்ணீர் எடுத்துச் செல்லவும், நெரிசல் குறைந்த நேரங்களில் பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.