கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிசின் (Paris) அழகை இரசிக்கப் படையெடுக்கும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து ‘போலி மனு’ மோசடி (arnaque à la pétition) மீண்டும் வீரியமாகத் தலைதூக்கியுள்ளது. அப்பாவிப் பயணிகளை ஏமாற்றிப் பணம் பறிக்கும் இந்தச் சட்டவிரோதக் கும்பல்கள் குறித்துப் பாரிஸ் காவல்துறைத் தலைமையகம் பொதுமக்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மோசடிக் கும்பலின் செயல்பாடு மிகவும் தந்திரமானதாகும். தொண்டு நிறுவனங்களுக்கான கோரிக்கை மனுக்களுடன் சுற்றுலாப் பயணிகளை அணுகும் இந்த மோசடிக்காரர்கள், பெரும்பாலும் தங்களைச் செவித்திறன் அற்றவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் (Deaf and mute) போலப் பாசாங்கு செய்துகொள்வார்கள். பயணிகளிடம் இரக்கத்தைக் கோரி மனுவில் கையெழுத்து வாங்கும் இவர்கள், பின்னர் அந்தப் போலித் தொண்டு நிறுவனத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு கட்டாயப்படுத்திப் பணத்தையும் யாசிப்பார்கள்.
இவர்களின் நாடகத்தை நம்பி மக்கள் கொடுக்கும் சிறு தொகை, பின்னணியில் இயங்கும் மிகப்பெரிய சட்டவிரோத ரகசியக் கும்பல்களுக்கே செல்வதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், இவர்களுக்குப் பணம் கொடுப்பதற்காகப் பயணிகள்பணப்பையை வெளியே எடுக்கும்போது, அவர்களின் இதர உடைமைகள் திருடப்படவும் அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவியும் 5-ஆவது வட்டாரத்தில் உள்ள குவார்டியர் லத்தீன் (Quartier Latin) மற்றும் 4-ஆவது வட்டாரத்தில் உள்ள புகழ்பெற்ற நோற்ற-டாம் (Notre-Dame-de-Paris) தேவாலயத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இக்கும்பலின் நடமாட்டம் பெருமளவில் அதிகரித்துள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் இதுபோன்ற போலி நபர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.