ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய டிஜிட்டல் எல்லை அமைப்பான ‘நுழைவு-வெளியேற்ற அமைப்பு’ (EES – Entry/Exit System) அமலுக்கு வந்த முதல் ஆறு மாதங்களில், அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவை மீறித் தங்கியிருந்த சுமார் 8,700-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு ஐரோப்பாவின் ‘ஷெங்கன்’ (Schengen) பகுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த EES அமைப்பின் மூலம், கடவுச்சீட்டுகளில் முத்திரையிடும் முறை மாற்றப்பட்டுப் பயணிகளின் வருகை மற்றும் வெளியேற்றம் டிஜிட்டல் முறையில் தானியங்கிக் கணக்கீட்டின் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இதுவரை பதிவான 108.5 மில்லியன் பயணங்களில், விசா இல்லாதது, போலி ஆவணங்கள் மற்றும் தகுந்த காரணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக மொத்தம் 43,728 பேருக்கு ஐரோப்பாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறித் தங்குபவர்களுக்கு அபராதம் மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதற்கே தடை விதிக்கும் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கடுமையான டிஜிட்டல் கண்காணிப்பால் தங்களின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விநியோகச் சங்கிலி சீர்குலையும் அபாயம் உள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் தளவாட அமைப்புகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன. இதற்கிடையே, எல்லைப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ‘ஐரோப்பிய பயணத் தகவல் மற்றும் அங்கீகார அமைப்பு’ (ETIAS) இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகமாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.