80 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை கடற்படையின் P 4447
இலங்கை கடற்படையின் Fast Attack Craft P 4447 எனப்படும் அதிவேக தாக்குதல் படகு வெற்றிகரமாக மீட்கப்பட்டதையடுத்து, கடந்த மாதம் முதல் முன்னெடுக்கப்பட்ட பல கட்ட அவசர நடவடிக்கை நிறைவுக்கு வந்துள்ளது.
2026 ஆகஸ்ட் 15ஆம் திகதி அங்குலான கடற்பரப்பில் வழக்கமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது குறித்த படகு கடலில் சிக்கலுக்குள்ளாகி காணாமல் போனது. இதையடுத்து ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை, விமானப்படை, பொலிஸார் மற்றும் அங்குலான பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மீனவர்கள் இணைந்து செயல்பட்டனர்.
இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் படகில் இருந்த 11 கடற்படை வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, படகின் இரண்டாம் நிலை கட்டளை அதிகாரியின் சடலம் செப்டம்பர் 4ஆம் திகதி மீட்கப்பட்டதுடன், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது.
அதன் பின்னர், கடற்படையின் சிறப்பு நீர்மூழ்கல் மற்றும் மீட்புக் குழுக்கள் படகை மீட்கும் பணியில் ஈடுபட்டன. கடுமையான கடல் சீற்றம் மற்றும் நீருக்கடியில் நிலவிய சவால்களுக்கு மத்தியில், கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கடற்படையின் கடல்சார், படகின் உடற்பகுதி, மின்சாரம் மற்றும் மின்னணுவியல் பொறியியல் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவு மற்றும் விசேட உபகரணங்களைப் பயன்படுத்தி படகை கட்டம் கட்டமாக கடலுக்கு மேலே கொண்டு வந்தனர்.

சுமார் 80 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த P 4447 படகு செப்டம்பர் 11ஆம் திகதி வெற்றிகரமாக கடலுக்கு மேலே கொண்டுவரப்பட்டது. பின்னர் அது இழுவைக் கப்பல் மூலம் கொழும்பு டொக்யார்ட் வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த மீட்பு நடவடிக்கை, இலங்கை கடற்படையின் நீர்மூழ்கல் குழுவினரின் தொழில்முறை திறமை, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் கடற்படையின் பல்வேறு பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த பங்களிப்பின் மூலம் கிடைத்த முக்கியமான வெற்றியாகக் கருதப்படுகிறது.
மேலும், இந்த நடவடிக்கைக்கு இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கொழும்பு டொக்யார்ட் பிஎல்சி நிறுவனமும் தொழில்நுட்ப உதவிகளையும் விசேட நிபுணத்துவ ஆதரவையும் வழங்கியிருந்தன.
இதன் மூலம் P 4447 படகு தொடர்பான தேடுதல், மீட்பு மற்றும் இறுதி மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.