செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலை மாற்றம்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதுடன், மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் இலங்கையில் எரிபொருள் விலைகள் மறுபரிசீலனை செய்யப்பட வாய்ப்புள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்று (14) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் பல பகுதிகளில் சில எரிபொருள் விநியோக நிறுவனங்கள் எதிர்கொண்டுவரும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பிலும் இதன்போது கேள்விகள் எழுப்பப்பட்டன.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும், இலங்கையின் உள்நாட்டு சந்தையில் எரிபொருள் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக, தற்போதைய விலை நிலவரத்தில் தொடர்ந்து வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது சவாலாக மாறியுள்ளதாக சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அதிகரித்து வரும் செலவுகளை சமாளிப்பதற்கு பல்வேறு வழிகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போன்று எரிபொருளுக்கு அரசாங்க மானியம் வழங்குவது அல்லது சந்தை நிலவரத்துக்கு ஏற்ப கட்டுப்படுத்தப்பட்ட விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தனியார் எரிபொருள் நிறுவனங்கள் பல்வேறு முன்மொழிவுகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ள போதிலும், இறுதித் தீர்மானம் எடுக்கும்போது நுகர்வோரின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
இலங்கையில் எரிபொருள் விலை திருத்தம் பொதுவாக ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இம்மாத இறுதியில் தற்போதைய சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தை நிலவரங்களை மதிப்பீடு செய்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்திய பின்னர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.