பிரான்சின் நான்சி (Nancy) அருகே டோம்ப்லைன் (Tomblaine) பகுதியில் உள்ள ஆஷான் (Auchan) பல்பொருள் அங்காடிக்கு அருகில் சிறிய ரகச் சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகிப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிக்கு மிக அருகில் இந்த விபத்து நடந்திருந்தாலும், நல்வாய்ப்பாக அருகிலிருந்த வீடுகளுக்கோ அல்லது தரையில் இருந்த பொதுமக்களுக்கோ எவ்விதச் சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை எனக் காவல் துறையினர் (Police) தெரிவித்துள்ளனர்.

இந்த விமானத்தில் ஒரு (1) விமானி, ஐந்து (5) பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பயிற்சி பெறும் ஐந்து (5) செவிலியர்கள் என மொத்தம் பதினோரு (11) பேர் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ‘பாராசூட்’ மூலம் குதிக்கும் சாகசப் பயிற்சி (Skydiving) நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றபோதே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, விமானத்தில் பயணித்த பதினோரு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லோரன் நுனெஸ் (Laurent Nuñez) பிற்பகலில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
விபத்து நடந்த பகுதி முழுவதும் காவல் துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மருத்துவக் குழுக்கள் மற்றும் ஐம்பது (50) தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ‘மியூர்த்-எ-மொசெல்லே’ (Meurthe-et-Moselle) மாகாண ஆளுநர் ஈவ் செகி (Yves Séguy) நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்ததுடன், மாவட்ட அவசரகாலச் செயல்பாட்டு மையத்தையும் (COD) முடுக்கிவிட்டுள்ளார். விமானத்தில் ஏற்பட்ட கோளாறே விபத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்த மேலதிக விசாரணையை மெட்ஸ்-நான்சி லோரெய்ன் (Metz-Nancy Lorraine) விமானப் போக்குவரத்துப் பிரிவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.