பிரான்சின் இல்-டி-பிரான்ஸ் (Île-de-France) பிராந்தியத்தில் சமூக வீடுகளுக்காக (HLM) காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை, வரலாற்றிலேயே முதல் முறையாக இரண்டு மில்லியனைக் (2,058,483) கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஓராண்டில் மட்டும் இதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், தலைநகர் பாரிசில் (Paris) மட்டும் விண்ணப்பங்கள் 12 சதவீதம் உயர்ந்துள்ளன. வீடுகளுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் என்பதுடன், பெரும்பாலானவர்களின் ஆண்டு வருமானம் பன்னிரண்டாயிரத்து எண்பத்து மூன்று யூரோக்களுக்குக் (€12,083) குறைவாகவே உள்ளது.
விண்ணப்பித்தவர்களில் 21 சதவீதத்தினர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வீடின்றித் தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டில் இப் பிராந்தியம் முழுவதும் வெறும் அறுபத்தேழாயிரத்து நூற்றுப் பதின்மூன்று (67,113) சமூக வீடுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், ஒரு வீட்டைப் பெற மக்கள் சராசரியாக 30 முதல் 35 மாதங்கள் வரை நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.