எம்.வி ஹோண்டியஸ் (MV Hondius) சுற்றுலா கப்பலில் பயணம் மேற்கொண்ட பயணிகள் பலரைப் பாதித்த ஆண்டீஸ் ஹண்டா (Andes Hantavirus) வைரஸின் மரபணு வரிசையை (Genetic Sequencing) வெற்றிகரமாகக் கண்டறிந்துள்ளதாகப் பிரான்ஸ் சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் (Stéphanie Rist) கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்தக் கப்பலில் ஏற்பட்ட திடீர் வைரஸ் பரவல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சுகாதாரத் துறையிலும் மிகப்பெரிய பீதியைக் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வைரஸின் மரபணு வரிசைமுறையைப் புகழ்பெற்ற பாஸ்டர் நிறுவனம் (Pasteur Institute) வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது. இந்த மரபணுப் பகுப்பாய்வின்படி, கப்பலில் கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸானது, ஏற்கனவே தென் அமெரிக்காவில் (South America) தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வரும் வைரஸ் மரபணுவுடன் முழுமையாக ஒத்துப் போவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட் தனது எக்ஸ் (X) தளப் பதிவில் குறிப்பிடுகையில், “தற்போது கண்டறியப்பட்டுள்ள ஹண்டா வைரஸ் அதிவேகமாகப் பரவக்கூடியது என்பதற்கோ அல்லது அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்பதற்கோ இதுவரை எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லை” எனத் தெரிவித்து மக்கள் மத்தியில் நிலவிய அச்சத்தைப் போக்கியுள்ளார். மேலும், உலகளாவிய மருத்துவ ஆய்வுகளுக்கு உதவும் வகையில், கண்டறியப்பட்ட இந்த வைரஸின் மரபணு வரிசைத் தரவுகள் உலக அறிவியல் சமூகத்துடன் (Global Scientific Community) விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும் எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.