உலகின் அதிக சம்பளம் பெறும் பிரதமர்: சிங்கப்பூர் அரசின் புதிய சம்பள உயர்வு
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் அரசியல் தலைவராகக் கருதப்படும் சிங்கப்பூர் பிரதமரின் சம்பளம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் ஏற்கனவே அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு உலகின் மிக உயர்ந்த சம்பளங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய சம்பளத் திருத்தத்தின் மூலம் அந்தத் தொகை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் இந்த சம்பளத் திருத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, பிரதமரின் அடிப்படை ஆண்டு சம்பளம் 2.2 மில்லியன் சிங்கப்பூர் டாலரில் இருந்து 3.6 மில்லியன் சிங்கப்பூர் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது ஆண்டுக்கு சுமார் ரூ.27 கோடியாகும்.
அதேபோல், துணைப் பிரதமரின் ஆண்டு சம்பளம் 1.87 மில்லியன் சிங்கப்பூர் டாலரில் இருந்து 3.06 மில்லியன் சிங்கப்பூர் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.23 கோடியாகும்.
மற்ற அமைச்சர்களின் சம்பளமும் அவர்களின் அனுபவம், பதவியின் மூத்த நிலை மற்றும் துறைசார் பொறுப்புகளுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய திருத்தத்தின்படி, அமைச்சர்களின் ஆண்டு சம்பளம் 1.80 மில்லியன் சிங்கப்பூர் டாலர் முதல் 2.88 மில்லியன் சிங்கப்பூர் டாலர் வரை இருக்கும். இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.13.5 கோடி முதல் ரூ.21.7 கோடி வரை ஆகும்.

இந்த சம்பள உயர்வால் தமக்குக் கிடைக்கவுள்ள கூடுதல் தொகையை தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப் போவதில்லை என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். சம்பள உயர்வின் மூலம் தமக்குக் கிடைக்கும் கூடுதல் தொகையான சுமார் ரூ.10.5 கோடியை, தனது பதவிக் காலத்தில் தகுதியான நல்ல காரியங்களுக்காக முழுமையாக நன்கொடையாக வழங்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த சம்பளத்துக்கு, திறமையானவர்களை அரசுப் பணிக்குள் ஈர்ப்பது, ஊழலைத் தடுப்பது மற்றும் தனியார் துறையில் கிடைக்கும் வருமானத்துக்கு போட்டியாக அரசுப் பதவிகளுக்கு ஊதியம் வழங்குவது போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே சிங்கப்பூர் பிரதமரின் சம்பளம் உலக அரசியல் தலைவர்களிடையே தொடர்ந்து கவனம் பெறும் ஒன்றாக இருந்து வருகிறது.