போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சில மணிநேரங்களிலேயே பதற்றம்
அமெரிக்காவின் நடுவர் முயற்சியுடன் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததாகக் கருதப்பட்ட சில மணிநேரங்களிலேயே, தெற்கு லெபனானில் பதற்ற நிலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலின்படி, ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, தெற்கு லெபனானில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலிய படைகளின் மீது இரவு நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட தாக்குதல் வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணைகளை ஏவியதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தகவலை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதற்கு பதிலடியாக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கைகளை நிறுத்தினால் மட்டுமே லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலையான அமைதியும் பாதுகாப்பும் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தெற்கு லெபனானின் நபாத்தியே (Nabatieh) பிராந்தியத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும் இரு தரப்பினருக்கும் இடையிலான பதற்றம் தொடர்வது, எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்பு சூழல் இன்னும் முழுமையாக சீரடையவில்லை என்பதை வெளிப்படுத்துவதாக அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.