பிரதான செய்திகள்

சாந்தனை மரணத்தில் தள்ளியது மத்திய-மாநில அரசுகள் தான்: சீமான் சீற்றம்!

சாந்தனை மரணத்தில் தள்ளியது மத்திய-மாநில அரசுகள் தான்: சீமான் சீற்றம்! உடல்நலக் குறைவால் காலமான சாந்தனுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் பதிவில்,

“அன்புத்தம்பி சாந்தனுக்கு முழுமைபெறாத நீதி விசாரணை காரணமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு 32 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் மரணம் குறித்தான சிந்தனையுடன் வாழவேண்டிய கொடுந்தண்டனையும் வழங்கி தண்டித்தது இந்த நாடு.

பல கட்ட சட்டப்போராட்டங்களுக்கு பிறகு மரண தண்டனையிலிருந்தும், சிறைக்கொடுமையிலிருந்தும், தண்டனை விதித்த நீதிமன்றமே விடுதலை செய்த பிறகும், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு சிறிதும் கருணையற்று சிறப்பு முகாம் எனும் சித்ரவதை முகாமில் அடைத்து சிறுக சிறுக சிதைத்து இன்றைக்கு தம்பி சாந்தனை மரணம் வரை தள்ளியிருக்கிறது.

தாயின் வாழ்நாள் ஏக்கம்

அவரை உயிரோடு தாயகத்திற்கு அனுப்புவதில்லை என்ற முடிவில் வென்றுள்ளது இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் தான். பெற்ற மகனை ஒரு முறையாவது உயிரோடு பார்த்துவிட வேண்டுமென 33 ஆண்டுகளுக்கும் மேலாக கவலை தோய்ந்த இதயத்தோடும் கண்கள் நிறைந்த கண்ணீரோடும் காத்திருந்த தாயின் வாழ்நாள் ஏக்கம் இறுதிவரை நிறைவேறவில்லை என்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம்.

தம்பி சாந்தனின் உயிரற்ற உடலையாவது அவரது தாயிடம் ஒப்படைக்க இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இத்துயர்மிகுச் சூழலில் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகும் திருச்சி சித்ரவதை முகாமில் அடைக்கப்ட்டுள்ள மீதமுள்ளவர்களையாவது திமுக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். அன்புத்தம்பி சாந்தனுக்கு எனது கண்ணீர் வணக்கம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Back to top button