பெண்களை வலையில் சிக்கவைக்கும் குழுக்கள் : இலங்கை காவல்துறை எச்சரிக்கை
சமூக ஊடகங்கள் ஊடாக பெண்களைக் குறிவைத்து இடம்பெற்று வரும் மோசடிகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை காவல்துறை அவசர எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக Facebook, WhatsApp, Instagram உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி பெண்களை வலையில் சிக்கவைக்கும் குற்றக் குழுக்கள் தொடர்பில் பொதுமக்கள் அதிக அவதானத்துடன் இருக்க வேண்டுமென காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
காவல்துறையின் தகவலின்படி, சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமாகும் சிலர் தங்களை பணக்காரர்கள் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் நபர்களாகக் காட்டிக்கொண்டு, காதல் மற்றும் திருமண வாக்குறுதிகள் வழங்கி பெண்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்கின்றனர். பின்னர் பணம், நகை மற்றும் மதிப்புமிக்க பொருட்களை மோசடி செய்து பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நேரில் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து, உணவு அல்லது பானங்களில் மயக்க மருந்து கலந்து வழங்கி பெண்களை மயக்கநிலைக்கு தள்ளி பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்துவதோடு, அவர்களிடம் உள்ள நகை மற்றும் பணத்தையும் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகி வருவதாக காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், குற்றவாளிகளின் அடையாளம் வெளிச்சத்துக்கு வருவதைத் தடுக்க சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவங்களும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இணையம் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் பணம், நகை அல்லது மதிப்புமிக்க சொத்துகளை ஒப்படைக்க வேண்டாமெனவும், தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர வேண்டாமெனவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேசிய அடையாள அட்டை எண், வங்கிக் கணக்கு விபரங்கள், OTP குறியீடுகள் மற்றும் வீட்டு முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களை அந்நியர்களிடம் வழங்குவது மிகுந்த ஆபத்தானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் அச்சுறுத்தல், மிரட்டல் அல்லது மோசடிக்கு ஆளாகியிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால், பயந்து அமைதியாக இருக்காமல் உடனடியாக அருகிலுள்ள காவல்துறை நிலையம் அல்லது சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் புகார் அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அவசர உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் 118, 119, 107 மற்றும் 109 ஆகிய காவல்துறையின் அவசர உதவி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து நடைபெறும் இணைய வழி மோசடிகள் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் நிலையில், சமூக ஊடகங்களை பயன்படுத்தும் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்படுவது காலத்தின் தேவையாக இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.