இலங்கையில் கனமழை: 25 பேர் இடம்பெயர்வு; 8 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு
இலங்கையின் கண்டி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒரு பிரதேச செயலகப் பிரிவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்ததன்படி, வெள்ளப்பெருக்கால் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்காலிகமாக நாவலப்பிட்டிய பவ்வாகம வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த சில மணித்தியாலங்களில் அதிகபட்சமாக களுத்துறை மாவட்டத்தின் வல்லலாவிட்ட பகுதியில் 119 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஹங்வெல்ல, எல்பிட்டிய, நெலுவ, துன்ஹிந்த, வத்துரவில மற்றும் நாவுல பகுதிகளிலும் 50 முதல் 119 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலையையும், ஏனைய பகுதிகளில் பெய்து வரும் கனமழையையும் எதிர்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் முழுமையாக தயாராக இருப்பதாக பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் காலநிலை அறிவுறுத்தல்களை தொடர்ந்து அவதானிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவு ஏற்படுவதற்கான ஆரம்ப எச்சரிக்கைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அனர்த்த நிலைமை ஏற்பட்டால் பொதுமக்கள் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை தொடர்புகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, எல் நினோ தாக்கத்துடன் தொடர்புடைய தற்போதைய காலநிலை நிலைமைகளால் நாட்டின் எட்டு மாவட்டங்களில் 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது 36 பிரதேச செயலகப் பிரிவுகளில் 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 பேருக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அம்பாறை, அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, மாத்தளை, மொனராகலை, பொலன்னறுவை மற்றும் இரத்தினபுரி ஆகிய எட்டு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு அருகிலுள்ள கீழ் வளிமண்டலத்தில் வளிமண்டலத் தளர்வு நிலை ஒன்று உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் தாக்கமாக மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.