பிரான்சில் (France) கோடை விடுமுறைக்காகப் பயணங்களைத் திட்டமிடும் வாகன ஓட்டிகளைக் குறிவைத்து நெடுஞ்சாலைகளில் புதிய குறுஞ்செய்தி (SMS) மோசடி வலை விரிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசலைக் குறைப்பதற்காகப் பரவலாக அமைக்கப்பட்டு வரும் ‘தடையற்ற சுங்கச்சாவடிகளை’ (Free-flow tolls) மையமாக வைத்து இந்த மோசடி அரங்கேறுகிறது. இந்த அமைப்பில் வாகனங்களை நிறுத்தித் தடையங்களைத் திறக்கக் காத்திருக்கத் தேவையில்லை; சுங்கச்சாவடியைக் கடந்த எழுபத்து இரண்டு (72) மணிநேரத்திற்குள் இணையம் வழியாகக் கட்டணத்தைச் செலுத்தினால் போதுமானது. மக்களின் பயன்பாட்டிற்கான இந்த வசதியை இணையத்திருடர்கள் (Scammers) தற்போது தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலையில் பயணிக்கும்போதோ அல்லது பயணம் முடிந்தவுடனோ, “நீங்கள் சுங்கச்சாவடியைக் கடந்துள்ளீர்கள்; குறுகிய காலக்கெடுவிற்குள் கட்டணத்தைச் செலுத்தத் தவறினால் பல நூறு யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்” என அச்சுறுத்தும் வகையிலான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. அதில் உள்ள போலி இணைய இணைப்பைச் (Fake link) சொடுக்கினால், அதிகாரப்பூர்வ நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளத்தைப் போலவே தோற்றமளிக்கும் பக்கத்திற்குச் செல்லும். அங்குச் சிறிய கட்டணத்தைச் செலுத்துவதாக எண்ணித் தங்களது வங்கி விவரங்களைப் (Bank details) பதிவிட்டால், அடுத்த நொடியே கணக்கிலிருக்கும் மொத்தப் பணமும் திருடப்படும் அபாயம் உள்ளது.
நெடுஞ்சாலை ஆணையங்கள் ஒருபோதும் கட்டணம் செலுத்துமாறு கோரிப் பயணிகளின் அலைபேசிக்குக் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புவதில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அத்தகைய போலிக் குறுஞ்செய்திகள் வந்தால் சற்றும் தயங்காமல் அவற்றைப் புறக்கணித்து உடனடியாக அழித்துவிடுமாறு பொதுமக்களுக்குக் காவல் துறையினர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.