ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (Union européenne) வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில், தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் (Pesticides) அளவு அபாயகரமான அளவில் அதிகமாக உள்ளதை நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பான ‘ஃபூட்வாட்ச்’ (Foodwatch) கண்டுபிடித்துள்ளது. இதனால், ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு விதிகளை உடனடியாக மறுஆய்வு செய்ய வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள், அன்றாட உணவுப் பொருட்களில் கலந்திருப்பது வாடிக்கையாகிவிட்டதற்குக் சட்டக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளே முக்கியக் காரணம் என இந்தத் தொண்டு நிறுவனம் (ONG) எச்சரித்துள்ளது.

ஐரோப்பாவில் (Europe) ஒரு குறிப்பிட்ட ரசாயனப் பொருள் தடை செய்யப்பட்டாலும், உணவுப் பொருட்களில் அதன் அனுமதிக்கப்பட்ட எச்ச அளவை ஐரோப்பிய ஆணையம் (Commission européenne) தானாகவே குறைப்பதில்லை. அதைவிட அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளை ஐரோப்பாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடர்ந்து அனுமதி வழங்கப்படுகிறது. அந்த இரசாயனங்கள் வெளிநாடுகளில் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்பட்டு, அங்கு விளையும் உணவுப் பொருட்கள் வழியாக ஒரு “பூமராங்” (Boomerang) போல மீண்டும் ஐரோப்பியச் சந்தைகளுக்கே திரும்பி வருவது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இது தொடர்பாகப் பிரான்ஸ் (France), ஜெர்மனி (Allemagne), ஆஸ்திரியா (Autriche) மற்றும் நெதர்லாந்து (Pays-Bas) ஆகிய நாடுகளில் முன்னணி நிறுவனங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் தேநீர் (Thé), நறுமணப் பொருட்கள் (Épices) மற்றும் அரிசி (Riz) உள்ளிட்ட அறுபத்து நான்கு (64) இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை ஃபூட்வாட்ச் அமைப்பு ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தியது. இதில் நாற்பத்து ஐந்து (45) பொருட்களில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் எச்சங்கள் இருந்தன. சில பொருட்களில் இருபதுக்கும் (20) மேற்பட்ட பல்வேறு இரசாயனங்கள் கலந்து காணப்பட்டன. குறிப்பாகப் பதினான்கு (14) பொருட்களில் இவை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பை (LMR) மீறி மிக அதிக அளவில் இருந்துள்ளன.
குறிப்பாகப் பிரான்சில் பரிசோதிக்கப்பட்ட டியூக்ரோஸ் (Ducros) நிறுவனத்தின் இனிப்பு மிளகாய்ப் பொடியில் (Paprika doux moulu) குளோர்பெனாபிர் (Chlorfénapyr) மற்றும் ஃப்ளோனிகாமிட் (Flonicamide) ஆகிய இரு கொடிய பூச்சிக்கொல்லிகளும், ‘லு தாய் டோரோ ஏலே’ (Le Thaï Taureau Ailé) நிறுவனத்தின் அரிசியில் ஆந்த்ராகுவினோன் (Anthraquinone) என்ற ரசாயனமும் சட்டப்பூர்வ வரம்பைத் தாண்டி காணப்பட்டன. இதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட ரசாயனங்களுக்கு நிரந்தர அனுமதி வழங்க ஐரோப்பிய ஆணையம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள “ஓம்னிபஸ்” (Omnibus) என்ற புதிய சட்டத் தொகுப்பை ஐரோப்பிய நாடாளுமன்றமும் (Parlement européen) உறுப்பு நாடுகளும் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்றும், இந்த நச்சு வியாபாரத்தை (Commerce toxique) உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஃபூட்வாட்ச் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.