பிள்ளையான் -கருணா மோதல் ! மூவர் படுகாயம்…
பிள்ளையான் -கருணா மோதல் ! மூவர் படுகாயம்...

பிள்ளையான் -கருணா தரப்பினரிடையே மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் விநாயகமூர்த்தி முரளிதரனின்( (கருணா) கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது சிவனேசத்துரை சந்திரகாந்தன் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலிலேயே இவ்வாறு 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03.11.2024) இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், “மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பாடசாலை வீதியில் ஜனநாயக முன்னணி கட்சியான கருணா அம்மானின் கட்சியின் வேட்பாளரின் காரியாலயத்தின் முன்னாள் உள்ள வீதியில் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள்
இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் அங்குள்ள மதில்களில் ஒட்டப்பட்டிருந்த கருணா அம்மானின் கட்சி வேட்பாளர்களது சுவரொட்டிகளுக்கு மேல் பிள்ளையானின் கட்சி சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இதன்போது கருணா தரப்பின் வேட்பாளர் சென்று எங்கள் சுவரொட்டிகளுக்கு மேல் சுவரொட்டிகளை ஒட்டவேண்டம் என தெரிவித்த நிலையில் இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே வாய்தர்கம் ஏற்பட்டதையடுத்து பின்னர் கைகலப்பாகமாறியுள்ளது.
இதனையடுத்து கருணா தரப்பின் ஆதரவாளர் படுகாயமடைந்ததையடுத்து பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் படுகாய மடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.








