இன்றைய மாணவர் சமூகத்தினரிடத்தில் மருவி வருகின்ற தொடர் முயற்சி .

இன்றைய மாணவர் சமூகத்தினரிடத்தில் மருவி வருகின்ற தொடர் முயற்சி
வேகமாக ஓடிச் செல்லும் இவ்வுலகிலே மனிதனுடைய வாழ்க்கை மிகவும் குறுகியது அழகானது: ஒழுங்கான கட்டமைப்பானது. இத்தகைய குறுகிய வட்டமான வாழ்வை சிறப்புடன் அமைத்துக் கொள்ள “முயற்சி” எனும் துணைக்கரமான திறவுகோலானது மாணவர்களின் கல்வி வாழ்க்கை எனும் கதவை தட்டித்திறக்க அவசியமானதாக விளங்குகின்றது. இத்தகைய முயற்சியை கைக்கொள்ளும் போது வெற்றியும் அவர்களை அணுகலாம், தோல்வியும் அவர்களை அணுகலாம் என்றாலும் மாணவர்கள் அனைவரும் செய்யும் செயலின் முயற்சியின் பலனாக வெற்றி கிடைக்கும் போதுதான் அதனை எண்ணி மகிழ்ந்து கொண்டாடுகின்றனர்.
அதேவேளை தோல்வியை மட்டும் தழுவிக் கொள்ளும்போது மனம்சோர்ந்து தளர்ந்து, உடைந்து போகின்றனர். இவ்வாறான நிலை சந்தர்ப்பங்களாக கற்றல் சமூகத்தில் மாணவர்களை நோக்கி வரும்வேளை மனம் கலங்காது அவர்கள் துணிந்து மீண்டும் முயற்சிக்க எத்தணிக்க வேண்டும். இன்றைய மாணவர் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அனைத்து செயற்பாடூகளுக்கும் தொடர் முயற்சியின்மையே பிரதான காரணமாகும்.
நமது வாழ்க்கையில் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் வெற்றியை மட்டும் நோக்கி சென்றடைவதில்லை. மாறாக சில சந்தர்ப்பங்களில் தோல்வியையும் தழுவ வேண்டிய நிலையும் அனைவரின் வாழ்க்கைப் பாதையில் வருவதுண்டு. அவ்வப்போதே மாணவர்கள் தமது “தொடர்முயற்சி” எனும் துணைக்கரத்தை கைவிடாமல், மனம் சலியாது, மீண்டும் அக்காரியங்களில் முயற்சி செய்வதன் மூலம் அவர்களால் கல்வி எனும் போட்டியில் மீண்டும் வெற்றியை ஈட்டிக்கொள்ள முடியும். மனிதனாக பிறப்பெடுத்த நம் அனைவரினதும் வாழ்க்கையிலும் தொடர்முயற்சியானது வெற்றிக்கான ஊன்றுகோலாகவும், முதற்படியாகவும் அமைகின்றது.
இத்தகைய எத்தணிப்புக்களை தமது கல்விப்பாதையில் மாணவர்கள் மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் இலகுவான முறையில் அவர்களால் குறித்த கல்வி இலக்கில் வெற்றியை
அடைந்து கொள்ள முடியும். “முயற்சி திருவினையாக்கும்? என்பதற்கிணங்க மாணவர்கள் அனைத்து காரியங்களையும் கைக்கொள்ளும்போது கடின உழைப்போடூ. முயற்சியை மீண்டும் மீண்டும் மேற்க்கொள்வதன் மூலமே செய்யும் காரியம் முழுமையடைகின்றது. எத்துயர் வந்தாலும், எவ்வீழ்ச்சி கண்டாலும் மாணவர்கள் செய்யும் கருமங்கள் தோல்வியடையும் போது முயற்சியை மட்டும் கைவிடலாகாது தொடர்ந்து அச்செயலில் மீண்டும் மீண்டும் எத்தணிக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் கல்விப் போட்டிச் சூழலை எதிர்கொள்ளும் மாணவர்கள் வெற்றிவரும் போதும் மகிழ்வதுடன், தோல்விவரும் போது மட்டும் அச்செயலை கைவிடும் போக்கு உள்ளது. அதனை விடுத்து முயற்சியை கைவசம் வழக்கப்படுத்தி, அதனை தங்கள் கற்றல் பாதையில் மேற்க்கொள்வதன் மூலம் அனைத்து செயற்பாடுகளிலும் இலகுவாக வெற்றியடைய முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
தற்போதைய கல்விச் சமூகத்தில் பயணிக்கும் ஒவ்வொரு மாணவர்களும் செய்யும் காரியங்களில் தோல்வியடையும் போது அதனை எண்ணி வெட்கப்படாமல், அத்தோல்வியையே ஏணிப்படியாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறும் வழிகளை தெரிவு செய்து அழகான வாழ்க்கையை தங்களுக்கு ஏற்றாற்போல் திட்டமிட்டு வடிவமைத்து கொள்ள முடியும். இவ்வாறான முயற்சியின் பலனான கிடைக்கும் வெற்றிக்கு பல்வேறு சாதகமான கொள்கைகளை தெரிவு செய்து வகுத்து, காரியங்களில் முயற்சியுடன் செய்வதன் மூலம் அவர்களால் வெற்றியை இலகுவான முறையில் சுபீகரித்து தன்வசப்படுத்திக் கொள்ள முடியும். இவ்வேளை செய்யும் செயலை துணிந்து நேர்வழியில் செய்ய வேண்டும். கல்வியைத் தொடரும் மாணவர்கள் அன்றாடம் செய்யும் செயல்களை “துணிவுடன் செய்தால் துயரில்லை: பயத்துடன் செய்தால் அது எவ்வித பயனுமில்லை” என்பதற்கிணங்க ஒவ்வொரு செயலினையும் செய்யும் வேளை மாணவர்கள் பலமுறை சிந்தித்து, மனத்துணிவுடன் செயலாற்றல் எப்பொழுதும் மாணவர்களை கற்றல் செயற்பாடுகளில் அவர்களை கீழ்நிலைக்கு கொண்டு செல்லாது வெற்றியை நோக்கி பயணிக்க துணைவரும் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
மாணவர்கள் எந்தச் செயலை செய்யும் போதும் எவ்வித தயக்கமும், அச்சமும் இன்றி துணிந்து செய்வதினூடாக அவர்களை அணுகும் தோல்வி, கவலை, கஸ்டங்கள் என்பன விட்டூ அகன்று விலகிச் செல்கின்றன. எனவே எதற்கும் அஞ்சாமல் திட்டமிட்டு செயற்பட வேண்டும் என்று பல்வேறு தோல்விகளின் மத்தியில் விடாமுயற்சியின் பலனாக வெற்றிப்பாதையை நோக்கி சென்ற பல்வேறு அறிஞர்கள், தத்துவஞானிகளின் இவ்வாறான அனுபவக் கல்வியின் கருத்துக்கள் பல மனிதர்களின் இன்றைய ஆக்கபூர்வமான படைப்பிற்கு அனைத்து வழியிலும் கைகொடுப்பவையாக அமைந்துள்ளது என்பது யாவராலும் மறுக்க முடியாது.
அந்தவகையில் நோக்கும் போது அனைத்து வகையான சவால்கள், செயல்களின் வெற்றி பெறுவதன் ஒவ்வொரு பிரதிபலிப்பும் ஒவ்வொரு மனிதனிடமே குடிகொண்டுள்ளதென்பது தெளிவாகின்றது. ஒரு செயலை அற்றும் போது அதில் தோல்வி கண்டாலும் மாணவர்கள் செய்யும் விடாமுயற்சியின் பலனே மாணவர்களை வந்தடைகின்றது. வந்தடையும் பலன் வெற்றியாக அமைவதும், தோல்வியாக அமைவதும் மாணவர்களின் கல்வி முயற்சிகளிலே தங்கியுள்ளது.
அந்தவரிசையிலே வரலாற்று சம்பவங்கள் அனைத்து வகையிலும் மாணவர்களின் வாழ்வில் அதிக படிப்பினைகளை கல்விச் செயற்பாடுகளில் கற்று கொடுூப்பவையாக வழிகாட்டுகின்றன. அதன்படி வாழ்வில் எத்தனையோ தோல்வியை கண்டும் இறுதியில் வெற்றியை ஈட்டிக் கொண்டவர்கள் வரிசையில் பலர் அதிகம் அவர்களுள் தோமஸ் அல்வா எடிசன் ,நெப்போலியன் பெனாபாட், மகா அலெக்சாண்டர்… என பல மகான்களை வரிசைப்படுத்திக் கொண்டே செல்லலாம். இவர்கள் அனைவரும் வியக்கத்தக்க அரிய சாதனைகளை உலகிற்கு தருவதற்கு பல முறைகளில் தோல்வியை எய்திய பின்னரே, அனைவரின் மனதினிலும் இடம்பிடிக்குமளவில் தமது சாதனைப் படைப்பாக்கங்களை எமக்கு தந்தள்ளனர். இருளின் மத்தியில் முடங்கிக் கிடந்த உலகிற்கு பிரகாச ஒளியை வழங்க மின்குமிழை கண்டூபிடித்த எடிசன் அதிக தடவை தனது முயற்சியை இடையில் கைவிடாமையின் காரணமாகவே இச்சாதனையை படைக்க முடிந்தது. இதனூடாக மாணவர்களின் நாளாந்தம் செய்யும் கற்றல் செயற்பாடுகள் தோல்வியடைந்தாலும் கூட, அதனைக் கண்டூ துவண்டூ விடாமல் தொடர் முயற்சியூடாக மேற்க்கொள்வது பயனளிக்க கூடும்.
கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல்” என்ற பாவின் மூலம் தெளிவாக எண்ணித்துணிந்த செயலை மனத்தளர்ச்சி இன்றி முயற்சியுடன் செயலாற்றல் நன்று. என தோல்வியில் கலங்காது செயற்படல் வேண்டும் என வலியுறுத்துகின்றார்.
வாழ்க்கையில் அனைவரையும் வெற்றியின் பால் கொண்டு செல்ல பல முயற்சிகள் சமூகம் மத்தியில் காணப்படுகின்றன. அதன்படி சினிமா துறையை நோக்குகையில் சில சினிமாப்பாடல்களில் இதனைக் காணலாம். எடுத்துக்காட்டாக “தூங்காதே தம்பி தூங்காதே.” என்ற பாடல் இளம் மாணவர் சமூகத்தினரை தட்டியெழுப்புவதை சுட்டி நிற்பதைக் காணலாம். சினிமா மட்டுமன்றி மனிதனை நல்வழிப்படூத்தும் அனைத்து துறைகளும் எவ்வேளையிலும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு வாய்ப்புக்களையும், ஆலோசனை வழிகாட்டல்களையும் வழங்கிய வண்ணமே செயற்படுவதன் மூலம் அனைவருக்கும் தற்துணிவு, தன்நம்பிக்கை, விடாமுயற்சி போன்ற ஆற்றல்கள் அதிகம் வளர இடமளிக்க கூடியதாக இருக்கும். முயற்சி செய்…!! அதுமட்டூமன்றி, இச்சமூகம் தோல்வி நிலையை அடையும் மாணவர்களை கேலி செய்வதை விடுத்து, அவர்களின் உள்ளார்ந்த உணர்வுகள், தனித்திறன்கள், ஆளுமைகள், வாழ்க்கைச் சூழல், தனியாள் பின்னணி போன்ற பல விடயங்களை மதித்து, மாணவர்களின் ஊக்கமான விடாமுயற்சியை அதிகரிக்க அனைவரும் அனைத்துவகையிலும் பக்கபலமாக விளங்க வேண்டும்.
இன்றைய கல்விச் சமூகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய அன்றாட வாழ்வில் நாளுக்குநாள் பல்வேறு கல்விச் சவால்களுக்கு முகங்கொடுத்த
வண்ணமே கழிக்கின்றனர். அதனடிப்படையில், மாணவர்கள் இன்று அதிகளவில் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் போக்கே காணப்படுகின்றது. பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறானது கிடைக்காத சந்தர்ப்பங்களில், எதிர்பார்ப்பனது நிறைவேறாத தருணத்தில், குறித்த போட்டிகளில் பங்குபற்றி தோல்வியினை அடையும் சந்தர்ப்பங்களில் தாழ்ந்த மனப்பாங்கு, மற்றவர்களின் எதிர்கருத்துக்களுக்கு செவி சாய்த்தல் போன்றவற்றின் தாக்கத்தினால் மாணவர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுகின்ற போக்கே இன்றைய சமூகம் எதிர்நோக்குகின்ற முக்கிய சவாலாக காணப்படூகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக, மட்டக்களப்பு மாவட்டத்தினை நோக்குகையில், கல்விகற்கும் மாணவர்கள் மன உளச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்யும் மரண வீதமானது, 2024ஆம் ஆண்டின்படி, 53% ஆக உயர்வடைந்துள்ளரமை கவலைக்குரிய விடயமாகும்.
அதுமட்டுமன்றி, மாணவர்களிடத்தே வலையத்தளங்களின் தவறான பாவனை, கையடக்க தொலைபேசிகளின் ஆக்கிரமிப்பு, போதைப்பொருள் பாவனை, சமூகமயமாக்கலுக்கு உட்படாமையினால் தனிமையினை அதிகம் விரும்புதல், தவறான சகபாடிகள் தொடர்பு, குடூம்ப பரஸ்பர தொடர்பின்மை போன்ற பல்வேறு காரணிகளாலும் இன்றைய கற்றல் சமூகமானது
பெரிதும் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் தற்போதைய மாணவர்கள் இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் சிக்கித் தவிப்பதனால், தொடர்முயற்சியினை கைவிட்டு வேறு ஓர் திசையை நோக்கிச்செல்கின்ற போக்கே அதிகம்
காணப்படுகின்றது. குறிப்பாக, பாடசாலை இடைவிலகல், இளம்வயது திருமணம், வெளிநாட்டூ பணிப்பெண் வேலைவாய்ப்பிற்கு செல்லல் என பல்வேறு தெரிவுகளை மேற்க்கொள்கின்றனர்.
சரியான முறையில் கற்காமல் பல இன்னல்களை வாழ்நாள் முழுவதும் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே மேற்கூறிய விடயங்களைத் நோக்கும் போது “ஒரு உருவத்தை
பிரதிபலித்து காட்டுவது கண்ணாடி என்பது போல், கல்விச் சமூகத்திற்கு சரியான பாதையைக் கடக்க உதவுவதில் தொடர்முயற்சி” முக்கிய இடத்தை பெறுகின்றது. கல்விச் சமூகத்தில்
மாணவர்கள் வாழ்வில் எப்படிப்பட்ட தோல்வி அடைந்தாலும், அதற்காக மனங்கலங்கி உளம்சோர்ந்து போகாமல், துணிந்து செயற்படுவதன் மூலம் எவ்வாறான கல்விச் சவால்கள்,
தடைகளையும் எதிர்த்து வெற்றிவாகை சூடிக்கொள்ள முடிவதுடன், எதிர்கால வாழ்க்கையை பயன்மிக்கதாக அமைத்து கொள்ள முடியும்.
சத்தியேஸ்வரன் சுபிசங்கரி,
நான்காம் வருட கல்வியியல்,
சிறப்புக் கற்கை மாணவி,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
, இன்றைய மாணவர் சமூகத்தினரிடத்தில் மருவி வருகின்ற தொடர் முயற்சி .









