ரொரன்றோவில் புலம்பெயர்தலுக்கு எதிரான பேரணி கலவரமாக மாறியது
ரொரன்றோவில் புலம்பெயர்தலுக்கு எதிரான பேரணி கலவரமாக மாறியது

ரொரன்றோவில் புலம்பெயர்தலுக்கு எதிரான பேரணி கலவரமாக மாறியது
கனடாவின் Toronto நகரில் புலம்பெயர்தலுக்கு எதிராக நடைபெற்ற பேரணி, எதிர்ப்புப் போராட்டம் காரணமாக கலவரமாக முடிந்துள்ளது. இந்த சம்பவம் சனிக்கிழமை மதியம் நகர மையத்தில் உள்ள Nathan Phillips Square பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புலம்பெயர்தலுக்கு எதிராகக் கருத்து கொண்ட குழுவொன்று அந்த சதுக்கத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக மற்றொரு குழுவும் அதே இடத்தில் திரண்டு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு உருவாகி, அது பின்னர் மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலைமையை கட்டுப்படுத்த முயன்ற Toronto Police Service அதிகாரிகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின் போது பொலிசாரை நோக்கி முட்டைகள், டாய்லெட் பேப்பர் மற்றும் சிறுநீரால் நிரப்பப்பட்ட பைகள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து, 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 29 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் புலம்பெயர்தல் தொடர்பான விவகாரங்கள் அண்மைக் காலமாக அரசியல் மற்றும் சமூக ரீதியாக தீவிர விவாதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் நகரின் பொது அமைதியை பாதித்துள்ளதாகவும், கருத்து வேறுபாடுகள் வன்முறையாக மாறாமல் கையாளப்பட வேண்டும் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

