எல் நினோ மீண்டும் தீவிரமடையும் அபாயம்
இந்த ஆண்டின் இறுதிக்குள் உலகளாவிய அளவில் சக்திவாய்ந்த “எல் நினோ” (El Niño) காலநிலை மாற்றச் சம்பவம் மீண்டும் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மற்றும் மத்திய வெப்பமண்டல பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கடல் நீர் அசாதாரணமாக அதிக வெப்பமடைவதன் விளைவாக உருவாகும் இந்த எல் நினோ நிகழ்வு, உலகின் பல நாடுகளில் கடுமையான வானிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாக கருதப்படுகிறது.
காலநிலை நிபுணர்கள் தெரிவிப்பதாவது, தற்போது உலக வெப்பமயமாதல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இம்முறை உருவாகக்கூடிய எல் நினோ தாக்கம் கடந்த காலத்தை விட மிகவும் தீவிரமானதாக இருக்கக்கூடும் என்பதாகும். குறிப்பாக 1877 முதல் 1878 ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஏற்பட்ட மிகப் பெரிய எல் நினோ நிகழ்வு உலகளவில் பாரிய மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியதாக வரலாற்று பதிவுகள் காட்டுகின்றன.

அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி, உணவுத்தட்டுப்பாடு மற்றும் நோய் பரவல் காரணமாக உலகம் முழுவதும் 5 கோடியுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அக்கால உலக மக்கள் தொகையை ஒப்பிடுகையில், இன்று அதே அளவிலான பேரழிவு ஏற்பட்டால் குறைந்தபட்சம் 25 கோடி மக்கள் வரை பாதிக்கப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் எச்சரித்துள்ளன.
அமெரிக்காவின் முன்னணி ஊடகமான The Washington Post வெளியிட்ட தகவலின்படி, எல் நினோ தாக்கம் காரணமாக சில நாடுகளில் கடுமையான வறட்சி நிலவும் போது, மற்ற பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் மழைகள் உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவின் பல நாடுகள் உணவுப் பாதுகாப்பு, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாய சேதங்கள் போன்ற சவால்களை எதிர்கொள்ள நேரிடும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதேவேளை, உலக நாடுகள் முன்கூட்டியே பேரிடர் தயாரிப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.