கலை, கலாசாரம்

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கையர்களுக்கு இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் திட்டம் அறிமுகம்

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கையர்களுக்கு பாதுகாப்பானதும், புதுப்பிக்கப்பட்டதுமான முறையில் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு விண்ணப்பிக்கும் முறையை இலகுபடுத்துவதற்கு அவசியமான தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய இவ்வாண்டு ஜுலை 16 ஆம் திகதியிலிருந்து கடவுச்சீட்டைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பவர்கள் https://www.immigration.gov.lk என்ற இணைப்பின் ஊடாக முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். அவ்வாறு ஜுலை 16 ஆம் திகதி முன்பதிவு செய்யும் விண்ணப்பதாரிக்கு இப்புதிய திட்டமானது ஜுலை 19 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். எனவே ஜுலை 18 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு தற்போது நடைமுறையில் உள்ள கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறைமையே அமுல்படுத்தப்படும்.

அதன்படி மேற்கூறப்பட்டவாறு விண்ணப்பித்ததன் பின்னர் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் முன்னுரிமை அடிப்படையிலேயே வழங்கப்படும். ஏற்கனவே கடவுச்சீட்டை வைத்திருப்போரும், கடவுச்சீட்டு இல்லாத புதிய விண்ணப்பதாரிகளும் இம்முறையில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்கமுடியும்.

கடவுச்சீட்டை வைத்திருக்கும் விண்ணப்பதாரி ஒருவருக்கு முன்னுரிமை வழங்கும்போது தற்போது செல்லுபடியான கடவுச்சீட்டொன்று காணப்படுதல், கடவுச்சீட்டின் செல்லுபடிக்காலம் 6 மாதங்களைவிடக் குறைவாக இருத்தல், கடவுச்சீட்டை அண்மையில் வெளிநாட்டுப் பயணத்துக்காகப் பயன்படுத்தியிருத்தல் ஆகிய 3 விடயங்கள் கவனத்திற்கொள்ளப்படும்.

அதேபோன்று இப்புதிய முறையில் பதிவுசெய்வதற்கு செல்லுபடியான தேசிய அடையாள அட்டை மற்றும் செல்லுபடியான கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பன அவசியமாகும். இவற்றுடன் தமக்கு ஏற்புடைய அனுமதிக்கப்பட்ட புகைப்படச்சாலையொன்றில் பெற்றுக்கொண்ட புகைப்பட சீட்டுடன் www.immigration.gov.lk எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து, ‘கடவுச்சீட்டு விண்ணப்பிப்பதற்காகப் பதிவுசெய்தல்’ எனும் குறியீட்டின் ஊடாகப் பதிவுகளை மேற்கொள்ளமுடியும்.

மேற்குறிப்பிட்ட முறையில் உரிய தகவல்கள் மற்றும் விபரங்கள் வெற்றிகரமாகப் பதிவேற்றப்பட்டிருப்பின், விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான திகதி குறுஞ்செய்தி ஊடாக விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும். அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள திகதியில் நண்பகல் 12.00 மணிக்கு முன்பதாக விண்ணப்பதாரி குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்துக்குச் செல்லவேண்டியது கட்டாயமானதாகும்.

அதேவேளை இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கான முன்பதிவு முறைமை ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டுக்கும் பொருத்தமானதாகும்.

இது இவ்வாறிருக்க தற்போது செல்லுபடியான கடவுச்சீட்டைத் தம்வசம் வைத்திருப்பவர்கள், அதில் பக்கங்கள் எஞ்சியிருப்பின், எதிர்காலத்தில் இலத்திரனியல் கடவுச்சீட்டு நடைமுறைப்படுத்தப்படும் வரை தம்வசமுள்ள கடவுச்சீட்டையே பயன்படுத்தலாம் என குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

, 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கையர்களுக்கு இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் திட்டம் அறிமுகம்

Back to top button