விஷமிகளின் அத்துமீறிய செயல்: கடும் நெருக்கடியில் மக்கள்…
விஷமிகளின் அத்துமீறிய செயல்: கடும் நெருக்கடியில் மக்கள்...

விஷமிகளின் கடும்போக்கு நடவடிக்கையால் உழவனூர் பகுதி மக்கள் பாரிய இன்னலை எதிர்நோக்குகின்றனர்.
மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து மழை காலங்களில் வெளியேறும் கழிவு, வாய்க்காலை மூடியும் அத்துமீறி அப்பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாலும் தற்பொழுது நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதியானது நெத்திலி ஆற்றுபகுதிக்கு ஒதுக்கப்பட்ட பகுதியாகவும் காணப்படுவதால் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உழவனூரில் நெருக்கடி
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்கள் நாளாந்தம் பயன்படுத்தி வரும் பிரதான பாதை மற்றும் அப்பாதைக்கு அருகே உள்ள கழிவு வாய்க்காலை மூடி அத்துமீறிநெற்செய்கையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக இப்பகுதியில் வாழும் முப்பதுக்கு மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் பிரதான பாதை சேதப்படுத்தப்பட்டுள்ளதால் கற்றல் நடவடிக்கைக்காக பல மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் போது இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக, புளியம்பக்கணை கமல சேவை திணைக்களம் மற்றும் கிராம சேவையாளர்கள் ஆகியோர்களுக்கு தெரியப்படுத்திய போதும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது வேதனை தருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழையால் வெள்ள நீர் வடிந்தோட முடியாதநிலை காணப்படுகிறது.
மேலும் மழை தொடருமாயின் இப்பகுதியில் இருக்கும் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேறு பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே இப்பகுதியில் முன்பு போன்று காணப்பட்ட பிரதான கால்வாயை தமக்கு பெற்றுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வெள்ள அனர்த்தத்திலிருந்து எம்மை பாதுகாக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றமை குறிப்பிடத்தக்கது.








