விடுதலைப் புலிகள் குறித்து அநுர அரசாங்கத்தின் நடவடிக்கைகள்: அமைச்சரின் அறிக்கை
விடுதலைப் புலிகள் குறித்து அநுர அரசாங்கத்தின் நடவடிக்கைகள்: அமைச்சரின் அறிக்கை

விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதால் அதன் கொடிகள் மற்றும் இலட்சினைகளை காட்சிப்படுத்த முடியாது என்பதுதான் எமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இனமுறுகலை ஏற்படுத்துவதற்கு குறிப்பிட்ட அரசியல் குழுவொன்று முயல்வது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த காணொளிகளை இந்த வருடம் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய கொண்டாட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நம்ப வைக்க இவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
இது தொடர்பான விசாரணையில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
வடக்கில் 244 மாவீரர் தினநிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன ஆனால் பத்தில் மாத்திரம் விடுதலைப்புலிகளின் கொடிகள் இலட்சினைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
குடும்பத்தவர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூரலாம் என்பதே எங்கள் நிலைப்பாடு, ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால் அதன் கொடிகளை இலச்சினையை காட்சிப்படுத்த முடியாது என்பதே எங்கள் நிலைப்பாடு என குறிப்பிட்டுள்ளார்.








