இலங்கை செய்திகள்

வடகிழக்கு தமிழர்களின் உண்மையான அபிலாஷைகளை தேசிய மக்கள் சக்தி புரிந்துகொள்ளவில்லை!

வடகிழக்கு தமிழர்களின் உண்மையான அபிலாஷைகளை தேசிய மக்கள் சக்தி புரிந்துகொள்ளவில்லை!

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து, அவர்கள் வட, கிழக்கு தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷைகள் என்னவென்பதை இன்னமும் அறிந்துகொள்ளவில்லை என்பதையே காண்பிக்கிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமத்துவம் என்பது தனியொரு இனத்துக்கானதாக அன்றி, சகல இனங்களுக்குமானதாக அமையவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, ‘அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வாக அமையாது.

வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி தமிழ் அரசியல்வாதிகள் பேசுவதில்லை. மாறாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப்பகிர்வு என்பன பற்றி மாத்திரமே பேசுவார்கள். இருப்பினும் நாம் வடக்கில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குக் கட்டம் கட்டமாக உரிய தீர்வு வழங்குவோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

டில்வின் சில்வாவின் இக்கருத்தை ‘வட, கிழக்கு தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷை என்னவென்பதை அறியாதோரின் கருத்து’ என விமர்சித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், இந்தக் கருத்து நடைபெற்று முடிந்த  ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்குத் தாம் மேற்கொண்ட தீர்மானம் சரியானது என்பதைக் காண்பிப்பதாகத் தெரிவித்தார்.

 

வடகிழக்கு தமிழர்களின் உண்மையான அபிலாஷைகளை தேசிய மக்கள் சக்தி புரிந்துகொள்ளவில்லை!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 2015 – 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுப் பூர்த்திசெய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அதனை எவ்வாறு செய்வது என்பது பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

எது எவ்வாறிருப்பினும் அத்தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு நாம் எடுத்த தீர்மானம் சரி என்பதையே டில்வின் சில்வாவின் கருத்து வெளிப்படுத்துகின்றது. தேசிய மக்கள் சக்தியினரை ஒட்டுமொத்தமாக இனவாதிகள் எனக் கூறமுடியாது. ஆனால் இத்தகைய கருத்துக்கள் அவர்கள் குறித்தவொரு இனத்தின் அபிலாஷைகளை சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காண்பிக்கின்றன.

சமத்துவம் என்பது தனியொரு இனத்துக்கானதாக அன்றி, சகல இனங்களுக்குமானதாக அமையவேண்டும். இருப்பினும் பொதுத்தேர்தலின் பின்னர் ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், இயலுமானவரை அதில் சமஷ்டி கட்டமைப்பை உள்ளடக்குவதை முன்னிறுத்தி அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவோம்’ எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

அதேவேளை இதுபற்றிக் கருத்துரைத்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ‘பொதுத்தேர்தலின் பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவிருப்பதாக தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது.

இருப்பினும் இப்புதிய அரசியலமைப்பானது நாட்டை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயற்பாடு என்பது அனைவருக்கும் தெரியும். அதனை இந்தக் கருத்து மீளுறுதிப்படுத்தியிருக்கிறது’ எனச் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய சகல தமிழ் அரசியல் கட்சிகளும் அதனை ஆதரித்ததாகக் குறிப்பிட்ட கஜேந்திரகுமார், எனவே எதிர்வருங்காலத்தில் இம்முயற்சியைத் தம்மால் மாத்திரமே முறியடிக்கமுடியும் என்றும், அதற்கு வட, கிழக்கு மாகாணங்களில் தமக்கு 10  ஆசனங்களேனும் கிடைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் தமிழ் அரசியல் தலைவர்கள் 13ஆவது திருத்தத்தை மாத்திரமே கேட்பதாகவும், தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை எனவும் டில்வின் சில்வா கூறுவது முற்றிலும் தவறானது எனச் சுட்டிக்காட்டிய ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பொருளாதார நெருக்கடி, காணி அபகரிப்பு, குடிநீர்ப்பிரச்சினை, தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல்கள் என்பன உள்ளடங்கலாக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி தாம் தொடர்ந்து பேசியிருப்பதாகவும், இருப்பினும் அதற்கு கடந்தகால அரசாங்கங்களும், தேசிய மக்கள் சக்தியும் செவிசாய்க்கவில்லை எனவும் விசனம் வெளியிட்டார்.

‘நாங்கள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையான தீர்வாகக் கருதவில்லை. இருப்பினும் அது நாட்டின் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டிருப்பதனால் முதலில் அதனை நடைமுறைப்படுத்துமாறும், அடுத்தகட்டமாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு நோக்கி நகருமாறும் வலியுறுத்திவருகிறோம்.

இருப்பினும் அரசியலமைப்பில் உள்ள ஒரு திருத்தத்தை நடைமுறைப்படுத்தச் செய்வதே பெரும் பிரயத்தனமாக இருக்கிறது. அவ்வாறிருக்கையில் அடுத்தகட்டம் நோக்கிப் பயணிப்பதென்பது மிகவும் சவாலான விடயமாகவே இருக்கும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

Back to top button