இலங்கை செய்திகள்
Trending
வசமாக மாட்டிய திருட்டு கும்பல்..! அதிரடி காட்டிய பொலிஸார்…
வசமாக மாட்டிய திருட்டு கும்பல்..! அதிரடி காட்டிய பொலிஸார்...

வசமாக மாட்டிய திருட்டு கும்பல் தொடர்பான சம்பவமொன்று வாழைச்சேனை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏறாவூர் முதல் பொலன்னறுவை வரை கூரிய ஆயுத முனையில் சங்கிலித்தொடராக இடம்பெற்ற திருட்டுச்சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.

அண்மைக்காலமாக வாழைச்சேனைப்பொலிஸ் பிரிவில் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணமுள்ளன.
அதன் தொடரில் நேற்று முன் தினமும் ஒரே நாளில் மூன்று வெவ்வேறிடங்களில் திருட்டுச்சம்பவங்கள் பதிவாகி இருந்தன.
இதில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி, ஹிஜ்ரா நகரில் மதீனா பள்ளிவாயலுக்கு முன்புள்ள வயோதிபரின் சில்லறைக்கடையிலும் தியாவட்டவான் மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களிலுள்ள வீடுகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிறைந்துறைச்சேனையிலும் இத்திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
களத்தில் இறங்கிய வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார திருட்டுச்சம்வங்கள் இடம்பெற்ற இடங்களுக்கு நேரடியாகச்சென்று பார்வையிட்டதுடன், கூடிய விரைவில் திருடர்களைப் பிடிக்கத்தேவையான ஆலோசனை வழிகாட்டல்களையும் வழங்கியிருந்தார்.
அதனடிப்படையில், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் திருட்டுக்கும்பலைத்தேடி களத்திலிறங்கிய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவைச்சேர்ந்த உத்தியோகத்தர்களான தினேஷ் (8656), அமரபந்து, பிரியங்கர (22897), மிலோஜன் (90983) ஆகியோர் அடங்கிய குழுவினரின் தீவிர தேடுதலின் பின்னர் திருட்டுக்கும்பல் அடையாளங் காணப்பட்டதுடன், களவாடப்பட்ட ஒரு சில பொருட்களை விற்கச்சென்ற சமயம் கடைக்காரர் வழங்கிய இரகசியத்தகவலின் பேரில் எல்லைக்கிரமமான ரிதிதென்ன பிரதேசத்தில் வைத்து அவர்களில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன், மற்றுமொருவர் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தார்.
அவரைத்தேடிய போதும் கிடைக்காத நிலையில் பிடிபட்ட நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் திருடப்பட்ட சைக்கிளை கடதாசி ஆலைக்கு அண்மையிலுள்ள காட்டுப்பகுதியில் மறைத்து வைத்த நிலையில் சைக்கிள் ஒன்றும், விற்பனை செய்யப்பட்ட இரு தொலைபேசிகளும் மீட்கப்பட்டதுடன், சந்தேக நபருடன் இணைந்து திருட்டில் ஈடுபட்ட நபர்களும் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இத்தொடர் திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்டு தலைமறைவாகியுள்ள ஏனையவர்களையும் கைது செய்ய பொலிஸார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த திருட்டுக்கும்பலை தேடிப்பிடிக்க கல்குடா அனர்த்த அவசர உதவிக்குழுவினர் தம்மாலான முழுப்பங்களிப்பையும் வழங்கியிருந்தனர்.
இத்திருட்டுக்கும்பலுக்கு இப்பிரதேசத்தில் மட்டுமல்லாது ஏறாவூர், பொலன்னறுவை போன்ற பிரதேசங்களில் ஆயுதமுனையில் இடம்பெற்ற தொடர் திருட்டுச்சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், அவ்வப்பிரதேச பொலிஸ் நிலையங்களூடாக சந்தேக நபர்களைக்கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.






