ரவி நியமனம் பற்றி ஐ.தே.க. அறியவில்லை – ஐ.தே.க. தலைவரின் விளக்கம்
ரவி நியமனம் பற்றி ஐ.தே.க. அறியவில்லை - ஐ.தே.க. தலைவரின் விளக்கம்

தேசியப்பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயர் அனுப்பட்டமை ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியாது. அவரின் இந்த நடவடிக்கை ஐக்கிய தேசிய கட்சியின் யாப்புக்கு முரணாகும். இதுதொடர்பில் இன்று இறுதி முடிவு அறிவிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் அனுப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று காலியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியாமலேயே ரவி கருணாநாயக்கவின் பெயர் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. சிலிண்டருக்கு உரித்தான அரசியல் கட்சியின் மூலமே அவரின் பெயர் வர்த்தமானியில் வெளியிட அனுப்பப்பட்டுள்ளதாகவே எமக்கு அறியக்கிடைத்திருக்கிறது.
புதிய ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் தலதா அத்துகோரல அல்லது சட்டத்தரணி ராேனால் பெரேராவை நியமிக்கவே கலந்துரையாடி இருந்தோம். இதுதொடர்பில் உறுதியான தீரமானம் எடுப்பதற்கு முன்னர் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை ஐக்கிய தேசிய கட்சி யாப்பின் 3 3,4 உறுப்புரைகள், 9 7ஆம் உறுப்புரை, 13 7 மற்றும் 8ஆம் உறுப்புரைகளை மீறும் நடவடிக்கையாகும்.
எனவே இந்த பிரச்சினை தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுடன் இன்று கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்க இருக்கிறோம். என்றாலும் ரவி கருணாநாயக்கவின் இந்த நியமனம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் எமக்கு எதுவும் தெரியாது. தலதா அத்துகோரலவை தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசிய கட்சி கலந்துரையாடி வந்தது. அது தொடர்பில் இன்று கலந்துரையாடி முடிவெடுப்பதற்கு இருந்த நிலையிலேயே இது நடைபெற்றுள்ளது.
என்றாலும் இந்த சர்ச்சை தொடர்பில் இன்று காலை ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனைத்து கட்சி பிரதானிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார்.








