கலை, கலாசாரம்

மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் அதிபராக அழகானந்தம் ஜெயப்பிரதாபன் கடமையேற்பு

(சித்தா)

இலங்கை அதிபர் சேவை தரம் III இற்கு புதிய உத்தியோகஸ்த்தர்களை இடமர்த்துதல் -2024 இன் கீழ் இசுறுபாய கல்வி அமைச்சின் செயலாளரின் கடிதத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக அழகானந்தம் ஜெயப்பிரதாபன் அதிபராக மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் இன்று கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக நியமனம் பெற்ற அதிபரை வரவேற்கும் நிகழ்வு அதிபர் ஆ.புட்கரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சக்திதாஸ், ஆரம்பக் கல்வி வளவாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கச் செயலாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர், மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அழகானந்தம் ஜெயப்பிரதாபன் வெல்லாவெளிக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது ஆரம்பக் கல்வியினை கற்றுக் கொண்ட  அதே பாடசாலையில் அதிபராகக் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டது இப் பாடசாலையின் வளர்ச்சிக்கு மிகவும் துணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து இடைநிலைக் கல்வியினை மட்/பட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் பயின்று உயர் கல்வியினை மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் பயின்றார்.

இந் நிலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியராக அரச துறையில் இணைந்து கொண்ட இவர் மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் முதல் நியமனத்தைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் மட்/ அரசினர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட ஆசிரியராக  மட்/பட்/ ஆணைகட்டியவெளி நாமகள் வித்தியாலயத்தில் கடமையாற்றினார். தொடர்ந்து பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் சிபார்சுக்கு அமைவாக சிறுவர் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டு தேசிய ரீதியில் அறிமுகமான சிறுவர் விளையாட்டினை (Kids Athletics) முதன் முதலாக பட்டிருப்புக் கல்வி வலயத்தில் நடாத்தி மாகாண, தேசிய மட்டத்தில் புகழை ஈட்டிக் கொண்டார்.

தனது கல்வித் தகைமையை மேலும் உயரத்தும் நோக்கில் போராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பட்டத்தினையும் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டமேற்கல்வி டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார். அக்காலப் பகுதியில் ஆசிரிய ஆலோசகர் சேவைக்கு உள்வாங்கப்பட்டு ஆரம்பக் கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதிபராகப் பதவியுயர்த்தபட்டமை அவரின் சேவைக்குக் கிடைத்த பெறுபேறாகும். 

 

, மட்/பட்/வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் அதிபராக அழகானந்தம் ஜெயப்பிரதாபன் கடமையேற்பு

Back to top button