இலங்கை செய்திகள்

பிரபாகரனின் இலட்சியங்களுக்கு புதிய அரசியலமைப்பில் இடமில்லை – சரத் வீரசேகர

பிரபாகரனின் இலட்சியங்களுக்கு புதிய அரசியலமைப்பில் இடமில்லை - சரத் வீரசேகர

விடுதலை செய்யும் தமிழ் அரசியல் கைதிகளின் பெயரை ஜனாதிபதி குறிப்பிட்டால்  அவர்கள் செய்த பயங்கரவாத செயற்பாட்டை நான் குறிப்பிடுவேன். பிரபாகரனின் நோக்கத்தை புதிய அரசியலமைப்பால் நிறைவேற்ற இடமளிக்க முடியாது. நாட்டின் ஒற்றையாட்சியை கருத்திற் கொண்டு மக்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கொள்கை பிரகடனத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக 2015 முதல் 2019 வரை ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் தயாரித்த சட்ட வரைவினை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனின் இலட்சியங்களுக்கு புதிய அரசியலமைப்பில் இடமில்லை - சரத் வீரசேகர

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நியமிக்கப்பட்ட குழுவில் பதவி வகித்த லால் விஜயநாயக்க ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் முன்னிலையில் இருந்தார். ஒற்றையாட்சி அரசியலமைப்பினை இரத்துச் செய்து சமஷ்டியாட்சி முறைமையிலான அரசியலமைப்பை உருவாக்கும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை ஒற்றையாட்சி நாடு என்பதால் தான் பௌத்த சாசனம் பாதுகாக்கப்படுகிறது. அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும், நிம்மதியாக வாழ்கிறார்கள்.சமஷ்டியாட்சி முறைமையிலான அரசியலமைப்பை உருவாக்கினால் 9 மாகாணங்களுக்கு மாறுப்பட்ட சட்டங்கள் இயற்றப்படும் இதனால் நாட்டின் தேவையற்ற முரண்பாடுகள் மாத்திரமே தோற்றம் பெறும்.

நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்காகவே 29 ஆயிரம் இராணுவத்தினர் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்தனர். அதேபோல் 14 ஆயிரம் இராணுவத்தினர் அங்கவீனமானார்கள். பாரிய இழப்பு மற்றும் தியாகத்துக்கு மத்தியில் பாதுகாத்த ஒற்றையாட்சியை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. பிரபாகரனின் சமஷ்டியாட்சி நோக்கத்தை புதிய அரசியலமைப்பின் ஊடாக நிறைவேற்றவும் எம்மால் இடமளிக்க முடியாது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடக்குக்கு சென்று மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகவும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் என்று சிறையில் எவரும் கிடையாது. விடுதலை செய்யும் அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலை ஜனாதிபதி குறிப்பிட்டால் அவர்கள் செய்த பயங்கரவாத செயற்பாடுகளை நான் குறிப்பிடுவேன். தமது அரசியல் பிரபல்யத்துக்காக தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் என்று அரசாங்கத்திடம் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய சுதந்திரம் ஒன்றும் இலகுவாக கிடைத்ததொன்றல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் தீர்மானமிக்கது. படித்தவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதை காட்டிலும் நாட்டு பற்றுள்ளவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். அதிகாரத்தில் இருந்த போதும், இல்லாத போதும் நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாக்க குரல் கொடுத்துள்ளோம். தேசிய மக்கள் சக்தி நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை கிடையாது. நாட்டின் ஒற்றையாட்சியை கருத்திற் கொண்டு பொதுத்தேர்தலில் சிறந்த தீர்மானத்தை மக்கள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.

Back to top button