
பதுளை, மடுல்சீமை லோகந்தய மலை பகுதிக்கு முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை அழைத்துச் சென்று தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை மலை உச்சியிலிருந்து கீழே வீசிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை, ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மடுல்சீமை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஆவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி குத்தகை அடிப்படையில் சந்தேக நபரிடமிருந்து முச்சக்கரவண்டி ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று சந்தேக நபர் தனது நண்பருடன் இணைந்து, கொலை செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியை மடுல்சீமை லோகந்தய மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், சந்தேக நபர் தனது நண்பருடன் இணைந்து, முச்சக்கரவண்டி சாரதியை தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை மலை உச்சியிலிருந்து கீழே வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








