தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு முக்கிய அறிவித்தல்..!!
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரோ அல்லது பின்னரோ சமூக வலைத்தளங்களில் உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை பரப்புவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறுகிறார்.

தேர்தல் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக செயற்படுவது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் எனவும் சமூக ஊடகவியலாளர்களும் அவ்வாறே செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய தலைவர் விசேட குழுவினால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் சில தரப்பினருக்கு பாரபட்சம் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டிய தலைவர், அவ்வாறான கருத்துக்களை பரப்புபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் பல துறைகளின் கீழ் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.








