கலை, கலாசாரம்

தங்க நகைகள் கொள்ளை: மூவர் கைது !

வடமேல் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களில் கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் தங்க நகைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் 2 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடையது எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடந்த சில மாதங்களாக கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தின் உத்தரவில் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதே கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நுரைச்சோலை, நாகொல்லாகம, தொரடியாவ, தெதிகம, கொஸ்வத்த ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களில் இவ்வாறு தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் கண்டி, குருநாகல், கட்டுகஸ்தோட்டை, கேகாலை ஆகிய பகுதிகளில் உள்ள அடகு கடைகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

, தங்க நகைகள் கொள்ளை: மூவர் கைது !

Back to top button