பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உளநலம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உளநலம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உளநலம் குறித்து அவதானமாகயிருக்கவேண்டும் என உளநல நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து பாடசாலை மாணவியொருவர் குதித்து உயிர்மாய்த்த சம்பவத்தின் பின்னரே உளநல நிபுணர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
கட்டிளம் பருவத்தை சேர்ந்த பலர் தங்கள் போராட்டங்களை வெளியில் சொல்லாமல் துயருகின்றனர் என தெரிவித்துள்ள மனநல மருத்துவர் சமன்வீரவர்தன மன அழுத்தத்திற்கான அறிகுறிகளை ஆரம்பகட்டத்திலேயே அடையாளம் காண்பது அவசியம் என தெரிவித்துள்ளார்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றம் குறித்து அறிந்திருப்பது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள அவர் தங்கள் பிள்ளைகள் திடீர் என நண்பர்கள் குடும்பத்தவர்களிடமிருந்து விலகிச்செல்வது அவர்கள் மனோநிலையில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவதானமாகயிருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் இரண்டு வாரங்களிற்கு மேல் சோகமாகயிருந்தால் அல்லது சீற்றத்துடன் காணப்பட்டால் அது குறித்து அவதானிக்கவேண்டும்,பொழுதுபோக்குகள்,அல்லது பழகுவதில் ஆர்வமின்மை உறங்கும் முறையில் மாற்றங்கள்,பசியின்மை பாடசாலை செயற்பாடுகளில் மாற்றங்கள் போன்றவை குறித்தும் எச்சரிக்கையாகயிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்
பிள்ளைகளிடத்தில் நம்பிக்கையின்மை வாழ்க்கையிலிருந்து தப்பிச்செல்ல முயலுதல் போன்ற உணர்வுகள் காணப்பட்டால் அது குறித்தும் பெற்றோர் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என ள மனநல மருத்துவர் சமன்வீரவர்தன தெரிவித்துள்ளார்.
பிள்ளைகளுடன் பெற்றோர் வெளிப்படையான தொடர்பாடல்களை பேணுவது அவசியம் என தெரிவித்துள்ள அவர் பிள்ளைகள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளக்கூடிய சூழலை பெற்றோர்கள் உருவாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.








