சுகாதாரத் துறைக்கு இவ்வருடத்தின் உயரிய நிதி ஒதுக்கீடு – அமைச்சர் அறிவிப்பு
சுகாதாரத் துறைக்கு இவ்வருடத்தின் உயரிய நிதி ஒதுக்கீடு - அமைச்சர் அறிவிப்பு

கதிர்காம கந்தன் மாத்திரமல்ல 33 கோடி தேவர்கள் தரும் நிதியைவிட அதிகளவான தொகை, சுகாதாரத் துறைக்காக வருடாந்தம் திரைசேரியிலிருந்து விடுவிக்கப்படுகிறது. வரலாற்றில் சுகாதார அமைச்சுக்கா, இவ்வருட வரவு செலவுத் திட்டத்திலேயே மிகப்பெரிய தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிறுவர் புற்று நோயாளர்களுக்கான எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சைப் பிரிவு நேற்று சுகாதார அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் பங்களிப்புடனும் கதிர்காமம் முருகன் ஆலயத்தின் நிதி உதவியுடன் மேற்படி விசேட அலகு புற்றுநோய் வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. சிறுவர் புற்றுநோயாளர்களுக்காக இலங்கை அரச வைத்தியசாலைகளில் முதன் முறையாக நிர்மாணிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை மற்றும் இரத்த அணுக்கள் மாற்று சிகிச்சைப் பிரிவு இதுவாகும்.
வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு மாடிக் கட்டிடத் தொகுதியின் மூன்றாம் மற்றும் நான்காம் மாடிகளில் குறித்த அலகு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வியாழக்கிழமை (02) இந்த திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எந்த அரசாங்கம் ஆட்சியில் இருப்பினும் அவர்கள் சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளிப்பது வழக்கம். ஆகையால் ஒவ்வொரு அரசாங்கமும் சுகாதாரத் துறைக்கு பெருமளவான நிதியை செலவிடுகிறது. கதிர்காம கந்தன் மாத்திரமல்ல 33 கோடி தேவர்கள் தரும் நிதியைவிட அதிகளவான தொகை, சுகாதாரத் துறைக்காக வருடாந்தம் திரைசேரியிலிருந்து விடுவிக்கப்படுகிறது. வரலாற்றில் சுகாதார அமைச்சுக்காக, இவ்வருட வரவு செலவுத் திட்டத்திலேயே மிகப்பெரிய தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சில சமயங்களில் நாட்டில் உள்ள செல்வந்தர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள், நிறுவனங்களின் உதவித் தொகையும் சுகாதார அமைச்சுக்கு கிடைக்கிறது. வரவு செலவு திட்டத்துக்கமைய தற்போது முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள செயற்பாடுகளை முறையாகவும் திட்டமிட்ட முறையிலும் மேற்கொள்வது அவசியம். எதிர்வரும் நாட்களில் அரசியல் தேவையின் அடிப்படையிலோ, வைத்தியசாலைக்குச் சென்றபின் மனதில் எழும் உணர்வுப்பூர்வமான எண்ணங்களின் அடிப்படையிலோ யாருக்கும் உதவ முடியாது.
அடுத்த 20 ஆண்டுகளளை கருத்தில் கொண்டு தேசிய திட்டத்தின்படி புதிய அபிவிருத்தி பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. எமது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு பிரதேச வைத்தியசாலை, மாவட்ட வைத்தியசாலைகளை தேசிய வைத்தியசாலைகளாக தரமுயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். எனினும் இது தேசிய வேலைத்திட்டத்துடன் எவ்வாறு பொருந்தும் என்பதைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்றார்.








