கலை, கலாசாரம்

கோட்டைக்கல்லாறு புனித தலயாத்திரை ஒன்றியத்தின் சிறப்பான தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான 11வது புனித யாத்திரை

ரவிப்ரியா

கோட்டைக்கல்லாறு புனித தலயாத்திரை ஒன்றியத்தின் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான 11வது புனித யாத்திரை சனிக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் கோட்டைக்கல்லாறு ஸ்ரீ அப்பாரைவில் பிள்ளையார் ஆலய விசேட பூஜையைத் தொடர்ந்து ஆரம்பமாகி. தும்பங்கேணியில் தரித்து உண்டியல் வழங்கி மற்றும் வாழைக்காலையில் இரவு தரித்து ஞாயிறு காலை தாந்தாமலையை சென்றடைந்தது.

குறித்த ஒன்றியத்தின் பல வருட அனுபவ முதிர்ச்சியால், மூவேளை உணவு வசதிகளும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பாதை முழுக்க தாகசாந்தி தாராளமாக கிடைக்கக் கூடியதாக இருந்தது.

முனைத்தீவு பகுதியில் காலை வேளையிலேயே மதிய உணவு பார்சல்களை வீட்டு வாசலில் இருந்து குடும்பம் குடும்பமாக அன்போடு வழிமறித்து வழங்கியது தனித் தமிழ் தொகுதியாம் பட்டிருப்பின் விருந்தோம்பல் பண்பை நன்கு வெளிப்படுத்தியது.

பட்டிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் புலரும் காலை ஆகாரத்துடன் யாத்திரிகர்களை ஆதரித்து அனுப்பி வைக்க வழியில் உள்ள ஆலயங்கள் எல்லாமே உபசரணையில் உயர்ந்து நின்றன. தும்பங்கேணி ஆலயத்தில் நடைபெற்ற மதிய போசனமும், இரவு வாழைக்காலையில் சுடச்சுட வழங்கிய இரவு உணவும் தாராளமாக பரிமாறிய விதமும் வேகமும், வியந்து பாராட்டத்தக்க கூடியவாறு அமைந்திருந்தன. உணவு தயிர் என்பன மேலதிகமாக அத்தனை பக்தர்களும் தங்குதடையின்றி வேண்டியளவு பெறக்கூடியவாறு கையிருப்பு பேணப்பட்டதே தவிர பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது போனது சிறப்பம்சமாகும்.

வாழைக்காலை ஆலய வளாகத்தில் யாத்திரிகர்கள் தங்குவதற்கான கிடுகு மூலம் அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

வாழைக்காலையில் இருந்து காலை 7.00 மணியளவில் ஆரம்பமான யாத்திரை வழியில் தனியார் நிறுவனமொன்றின் காலை ஆகார பார்சலை வழங்கி உற்சாகப்படுத்த யாத்திரிகர்கள் குழு காலை 9.00 மணியளவில் தனது தாந்தா யாத்திரையை திருப்திகரமாகப் பூர்த்தி செய்தது.

இந்த யாத்திரை வெறுமனே ஆன்மீகத்தை மட்டும் இலக்கு வையாமல் எமது பாரம்பரிய பண்பாட்டுப் பாரம்பரியங்களை வளர்த்தெடுப்பதாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் சமூக சமத்துவத்தின் ஆணிவேராகவும். ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் உறுதிப்படுத்துவதாகவும், சமய நம்பிக்கைக்கும் தெளிவிற்கும் உந்து சக்தியாகவும் அமைந்தது என்பதே உண்மையாகும்.நவீன வசதிகள் நிறைந்த உலகில் எளிமையை அறியவும் உணரவும் உடல் உள ஆரோக்கியத்திற்கு பெரிதும் உகந்த இத்தகைய யாத்திரிகைகள் தொடரட்டும்.  

 

, கோட்டைக்கல்லாறு புனித தலயாத்திரை ஒன்றியத்தின் சிறப்பான தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான 11வது புனித யாத்திரை

Back to top button