ஓய்வு நிலை ஆசிரியர் சாமித்தம்பி புண்ணியமூர்த்தி சத்தியப் பிரமாண மொழிபெயர்ப்பாளராக நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்.

அக்கரைப்பற்றினைச் சேர்ந்த ஓய்வு நிலை ஆசிரியர் சாமித்தம்பி புண்ணியமூர்த்தி ஆங்கிலம் – தமிழ் மொழி சத்தியப் பிரமாண மொழி பெயர்ப்பாளராக மட்டக்களப்பு மாவட்ட நீதவான் எச்.எம்.முகம்மட் பஷீல் முன்னிலையில் 30.07.2024 இல் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
சாமித்தம்பி புண்ணியமூர்த்தி தற்போது மட்டக்களப்பு நகரை வசிப்பிடமாகக் கொண்டிருந்தாலும் அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார். பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைப் பட்டதாரியான இவர் இதே பல்கலைக் கழகத்தின் மொழி பெயர்ப்பாளர் பாடநெறியில் (Post Graduate Diploma in Translation Studies) சித்தியடைந்தார். அத்துடன் கல்வி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த தொலைக் கல்வி நிலையத்தின் ஆங்கில டிப்ளோமா பாடநெறியிலும் இரண்டாம் பிரிவுச் சித்தியைப் பெற்றவராவார். மேலும் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் பட்டமேற் கல்வி டிப்ளோமாச் சான்றிதழினையும், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கல்வி முதுமாணிப் பட்டத்தினையும் பெற்ற கல்விமானாகும்.
2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நீதி அமைச்சினால் நடாத்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த சாமித்தம்பி புண்ணியமூர்த்தி அகில இலங்கை சமாதான நீதவானாக சமூகப் பணியாற்றிவரும் இன்நிலையில் இன்று சத்தியப் பிரமாண மொழி பெயர்ப்பாளராக கடமையாற்ற உள்ளார் என்பதுடன் இவர் அக்கரைப்பற்று சாமித்தம்பி பூரணம்மா ஆகியோரின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
, ஓய்வு நிலை ஆசிரியர் சாமித்தம்பி புண்ணியமூர்த்தி சத்தியப் பிரமாண மொழிபெயர்ப்பாளராக நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்.









