இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவை கைது செய்யும் நடவடிக்கை -சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவை கைது செய்யும் நடவடிக்கை -சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

புலனாய்வு ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவை கைது செய்வதற்கான நகர்வுகள் குறித்து அதன் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் சுதந்திர ஊடக இயக்கம், அவரைக் கைது செய்வதற்கான எந்தவொரு முயற்சியும் பலமான எதிர்ப்பையும் பொருத்தமான நடவடிக்கையையும் சந்திக்கும் என்று எச்சரிக்கிறது.

ஜயவர்தனவினால் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அவரை எதிர்காலத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையிட்டு சுதந்திர ஊடக இயக்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஜயவர்தனவின் நடவடிக்கைகள் தற்போதைய விசாரணைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், அவருக்கு எதிராக பொருத்தமான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) மனிதப் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இந்துக சில்வா கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததன் பின்னணியிலேயே இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தரிந்து ஜயவர்தன ஒரு புலனாய்வு ஊடகவியலாளர் ஆவார். அவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்த 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள் உட்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து விரிவாக அறிக்கையிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவை கைது 
செய்யும் நடவடிக்கை -சுதந்திர
 ஊடக
 இயக்கம் கண்டனம்

நீதிமன்றில் நடந்துகொண்ட விதம் காரணமாக குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து முன்னர் நீக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் இந்துக சில்வா பின்னர் 2019இல் கோட்டாபய ராஜபக்ஷ நிர்வாகத்தால் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார். இவரின் நடவடிக்கைகள் குறித்து சுதந்திர ஊடக இயக்கம் அதன் கவலையை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்பெக்டர் சில்வா, அப்போதைய சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு எதிரான சதிச் செயலில் ஈடுபட்ட அதிகாரியாக ஜெயவர்தனவின் அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சூழ்ந்துள்ள மர்மங்களை மற்றும் மறைக்கப்பட்ட ஆபத்தான உண்மைகளை வெளிக்கொணரவும் அம்பலப்படுத்தவும் பணியாற்றும் ஓர் ஊடகவியலாளரை பொலிஸார் இலக்கு வைப்பது கவலையளிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிடுகிறது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி தொடர்ந்து தாமதிக்கப்படுவதோடு வெறும் அரசியல் வாக்குறுதியாக குறைக்கப்பட்டதாகவும் தோற்றமளிக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது தற்போது பொலிஸார் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாகும் என்பதை மீண்டும் வலியுறுத்தும் அதேவேளை புலன் விசாரணைகள் தடம் புரளாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும், தனது பணியை சிறப்பாகச் செய்ததற்காக ஊடகவியலாளர்களுக்கு எதிராக குறுகிய நோக்குடன் பழிவாங்கும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் குற்ற விசாரணை பிரிவு (CID) மற்றும் காவல்துறையினரை சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

தரிந்து ஜயவர்தன கைது செய்யப்பட்டால், அவரது உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும் சுதந்திர ஊடக இயக்கம் எச்சரிக்கிறது.

Back to top button