இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் !

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காணக் கோரி, நேற்றைய தினம் சில ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து பாடசாலைகளிலும் மாணவர்கள் வழமை போன்று சமுகமளித்ததாகவும் பாடசாலை நடவடிக்கைகளும் இயல்பாக இடம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வேலை நிறுத்தப் போராட்டமானது ஆசிரியர் மற்றும் அதிபர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் ஒன்றாகவே அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகவீன விடுமுறையை மேற்கொண்டு அரச மற்றும் அரச அனுசரணை பாடசாலைகளின் ஆசிரியர்கள் மேற்கொண்ட மேற்படி வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான போராட்டம் வெற்றி கொள்ள வேண்டுமானால், ஒன்றிணைந்த போராட்டமாக அது முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஆசிரியர் மற்றும் அதிபர்கள் கூட்டணி அண்மையில் போராட்டமொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதனை சீர்குலைக்கும் வகையிலேயே நேற்றைய மேற்படி வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் !









