அநுரவை வாழ்த்திய இந்திய தூதுவர்: அதானி காற்றாலை திட்டம் இந்திய-இலங்கை தொடர்பில் முக்கிய எதிர்காலம்
அநுரவை வாழ்த்திய இந்திய தூதுவர்: அதானி காற்றாலை திட்டம் இந்திய-இலங்கை தொடர்பில் முக்கிய எதிர்காலம்

இலங்கை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க, மிகப்பெரும் வெற்றியை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தனது இடதுசாரி கூட்டணியின் நிலையை உறுதி செய்துகொண்டதை தொடர்ந்து இந்தியா இதனை வரவேற்ற அதேவேளை பரஸ்பர நன்மைக்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பை மீளவலியுறுத்தியது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தெளிவான பின்னர் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா இலங்கை ஜனாதிபதி விரைவில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என்ற புதுடில்லியின் வேண்டுகோளை மீண்டும் முன்வைத்தார்.
செப்டம்பரில் இலங்கை ஜனாதிபதியாக அனுரகுமாரதிசநாயக்க தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு இராஜதந்திரி இந்திய தூதுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களையும்,61 வீதமான வாக்குகளையும் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி,225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றதுடன் ஜனாதிபதி என்ற அனுரகுமாரதிசநாயக்கவின் நிலையை வலுப்படுத்தியுள்ளது.
கடந்த நாடாளுமன்றத்தில் ஜேவிபி தலைமையிலான இந்த கூட்டணிக்கு மூன்று ஆசனங்கள் மாத்திரம் கிடைத்தன.
சக ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் இந்தியா இந்த ஆணையை வரவேற்கின்றது, எங்களின் அனைத்து மக்களின் நன்மைக்காகவும் மேலும் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என இலங்கை ஜனாதிபதியை சந்தித்த பின்னர் இந்திய உயர்ஸ்தானிகர் சமூக ஊடக பதிவில் தெரிவித்தார்.

குறிப்பிடத்தக்க விதத்தில் ஜேவிபியுடன் சிங்கள தேசியவாதம் தொடர்புபட்டுள்ள போதிலும்,தேசியமக்கள் சக்தி யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் தமிழ் கட்சிகளை விட சிறப்பாக செயற்பட்டுள்ளது.
பரஸ்பரம் பொருத்தமான தினத்தில் இந்தியாவிற்கு இலங்கை ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஜா மீண்டும் முன்வைத்துள்ளார்.
கடந்தவாரம் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.
புதிய ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஜனாதிபதி தேர்தலிற்கு இரண்டு வாரங்களிற்கு பின்னர் இலங்கைக்கு ஜெய்சங்கர் விஜயம் மேற்கொண்டார்.
ஜேவிபி பாரம்பரியமாக இந்திய எதிர்ப்பு கொள்கையை பின்பற்றிவந்த போதிலும் திசநாயக்க,இந்தியா நேசக்கரம் நீட்டுவதற்கு சாதகமான விதத்தில் பதிலளிக்கின்றார் என்பதை ஜெய்சங்கரின் விஜயம் வெளிப்படுத்தியது.
கடந்த பெப்ரவரியில் இந்தியாவிற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
ஒக்டோபரில் ஜெய்சங்கரை சந்தித்தவேளை இலங்கை ஜனாதிபதி இலங்கையை இந்தியாவின் பாதுகாப்பு நலன்களிற்கு ஆபத்தான விதத்தில் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் என மீண்டும் உறுதியளித்தார்.
நம்பிக்கை,வெளிப்படைதன்மை போன்றவற்றை ஊக்குவிக்கவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார் என தெரியவருகின்றது.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் வளர்ச்சியடைந்துவரும் சூழமைவில் இது இந்தியாவிற்கு முக்கியமான விடயம்.
இந்திய இலங்கை பாதுகாப்பு ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தது என இரண்டு அரசாங்கங்களும் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தொடரும் அபிவிருத்தி திட்டத்திற்கு இந்தியா முன்னுரிமை வழங்கும் என ஜெய்சங்கர் உத்தரவாதம் அளித்துள்ள நிலையில் வளமான இலங்கை என்ற நோக்த்தை நிறைவேற்றுவதற்கும் இலங்கை மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கும் இந்தியாவின் உதவி அவசியமானது என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தனது நாட்டின் உற்பத்தி செலவை குறைப்பதற்காக மீள்வலுச்சக்தியை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியப்பாடுகளை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ள போதிலும்,சூழல் பாதிப்பு விவகாரங்கள் காரணமாக அதானி குழுமத்தின் காற்றாலை மின்சக்தி திட்டத்தை கைவிடுவது என்ற ஜனாதிபதி தேர்தல் கால வாக்குறுதி குறித்து இந்தியா தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளது.
இந்த திட்டம் இலங்கையின் எரிசக்தி சுயாதிபத்தியத்தை மீறும் விடயம் என இலங்கை ஜனாதிபதி கருதுகின்றார்.முன்னைய அரசாங்கம் வழங்கிய அனுமதியை இரத்துசெய்வது குறித்து தனது அரசாங்கம் மீள்பரிசீலனை செய்கின்றது என அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
நாடாளுமன்ற தேர்தல் – புதிய அமைச்சரவை ஏற்படுத்தப்பட்ட பின்னர் இறுதி முடிவை அறிவிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.








