பிரதான செய்திகள்

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மரணம்

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மரணம்

தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மரணம்

இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரான மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர் யாழில் காலமானார்.

உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(29.01.2025) இரவு 10. மணிக்கு உயிரிழந்துள்ளார்.

மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் காலமானார்.

யாழ் போதனா வைத்தியசாலை

இவரது மரணம் தொடர்பில் உறுதிப்படுத்துவதற்காக தொடர்புகொண்டபோது அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை வெளியிட்டுள்ள தகவலின்படி,

”முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்ததை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான தொடர்புகளுக்கமைவாக இச்செய்தியை வெளியிடுகிறோம்.

நன்றி, யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம்’’ என தெரிவித்துள்ளது.

மாவை சேனாதிராஜா

மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா (பிறப்பு: 27.10.1942) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.

மாவை சேனாதிராஜாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார்.

யாழ். வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர்,இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றுக்கொண்டார்.

அரசியல் பயணம்

சேனாதிராஜாவின் அரசியலை பொருத்தபட்டில், இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார். 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.

மேலும், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.

இதனை தொடர்ந்து, 1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவரியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். சேனாதிராஜா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், டெலோ உள்ளிட்ட தரப்புடன் கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 13ஆவதாக வந்து தோல்வியடைந்தார்.

எனினும், அ. அமிர்தலிங்கம் 1989 ஜீலை 13 படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராஜா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.

அதன் பின்னர், 1999 ஜீலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.

2000ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.

இதனை தொடர்ந்து 2001 ஒக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.

மேலும், 2001 தேர்தலில் ததேகூ சார்பாக யாழ் மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். 2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

செப்டம்பர் , 2014இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

தேர்தல் வரலாறு

1989 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 2,820 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.எனினும் நாடாளுமன்ற ஆசனத்தை தக்கவைக்க போதுமானதாக காணப்படவில்லை.

2000 பொதுதேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 10,965 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

2001 பொதுதேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 33,831 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

2004 பொதுதேர்தலில் 38,783 வாக்குகளை பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

2010 பொதுதேர்தலில் 20,501 வாக்குகளை பெற்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குதெரிவு செய்யப்பட்டார்.

2015 பொதுதேர்தலில் 58,782 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்குதெரிவு செய்யப்பட்டார்.

தொடர்ந்து 2020 பொதுதேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், 20,358 வாக்குகளை பெற்றிருந்த போதும் அவர் தெரிவு செய்யப்படவில்லை.

Back to top button