பேருந்தில் சில்மிஷம் செய்பவர்களுக்கு விசேட அறிவித்தல்

தினசரி அடிப்படையில் பொலிஸ் நிலையங்களுக்கு வரும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பை மையமாக கொண்டு பொதுப் போக்குவரத்துச் சேவைகளுக்குள் பாலியல் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதே இந்த நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும் என்று பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையை அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.
பொதுப் போக்குவரத்து அதிகமாக உள்ள காலை 08:00-10:00 மற்றும் மாலை 17:00-19:00 ஆகிய நேரங்களில் இந்நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு, பொலிஸாருக்கு ஐஜிபி அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, வீதிகள், பஸ் நிலையங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டு, சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பஸ்களில் பயணிப்பார்கள்.
சிவில் உடையில் பயணிக்கும் உத்தியோகத்தர்களுக்கு உதவி தேவைப்படும் போது அவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்குத் தயாராக, சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுக்களை, குறிப்பாக பிரதான வீதிகளை உள்ளடக்கியதாகச் செயற்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.