யாழில் தம்பதியர் படுகொலை: மூவர் பொலிஸ் வலையில்…
யாழில் தம்பதியர் படுகொலை: மூவர் பொலிஸ் வலையில்...
யாழில் தம்பதியரின் படுகொலையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் பொலிஸாரால் கைதாகியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 51) அவரது மனைவியான சுப்பிரமணியம் மேரி ரீட்டா (வயது 50) ஆகியோர் புதன்கிழமை வீட்டில் படுகொலை செய்ய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
படுகொலை செய்யப்பட்ட குடும்ப தலைவர் சலவை தொழிலாளி எனவும் , அவர் அச்சுவேலி வைத்தியசாலை துணிகளை சலவை செய்யும் ஒப்பந்தத்தை அண்மையில் பெற்று இருந்ததாகவும் , அதனால் தொழில் ரீதியில் எதிர்ப்புக்கள் சில கிளம்பியிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
அந்நிலையில் பொலிஸார் மூவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை கணவன் மற்றும் மனைவியை கழுத்தை நெரித்த பின்னர் கொங்கிறீட் கற்களால் தலையில் பலமாக தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படுகொலையானவர்களின் ஒரு மகன் வெளிநாடொன்றில் வசித்து வருவதாகவும் மற்றைய மகள் தாய் தந்தையாருடன் படுகொலை நடைபெற்ற வீட்டில் வசித்து வந்த நிலையில் சம்பவ தினத்தன்று தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்துள்ளார் என பொலிஸ் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.