சமகால அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் மக்கள் !
சமகால அரசாங்கத்தின் மீது கடும் கோபத்தில் மக்கள் !
இலங்கையில் அநுர அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு மாதத்தையும் கடந்து விட்ட நிலையில், மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துள்ளதா என்பது தொடர்பில் கவலை வெளியிடப்பட்டது.
நாட்டில் சடுதியாக அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. பணவீக்கம் குறைவடைந்துள்ளது என பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் மக்கள் வாழ்க்கை செலவு மட்டும் எந்தவித மாற்றமும் இன்றி அதிகரிப்பிலேயே உள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ரணில் அரசாங்கத்தின் இறுதிக்காலப்பகுதி சுமூகமான நிலையில் இருந்த போதும், தற்போது அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக பலர் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
இந்த மாதத்தில் பொருட்களின் விலைகளில் கணிசமான அதிகரிப்பை உணர்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதத்தில் பொருட்களுக்கான 10 ஆயிரம் ரூபா செலவிட்ட நிலையில், அதே பொருட்களுக்கு தற்போது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொகை செலவிடுவதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஆட்சியை பொறுப்பேற்றதுடன் பல்வேறு மாற்றங்களை செய்யப் போவதாக தேர்தல் மேடைகளில் சூளுரைத்த சமகால ஜனாதிபதி, தனது ஆட்சியை பலப்படுத்தும் நோக்கிலேயே செயற்படுவதாகவும், மக்கள் நலன்சார்ந்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையும் பலர் குறைப்பட்டுள்ளனர்.
தற்போதைய அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. சுற்றுலா பயணிகளை நாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு வேலைத்திட்டங்களை சர்வதேச மட்டத்தில் முன்னெடுத்திருந்தனர்.
அதன் காரணமாக பெருந்தொகை சுற்றுலா பயணிகளால் அமெரிக்க டொலர் உள்வருகை அதிகரித்துள்ளது.
மத்திய வங்கியில் டொலரின் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில், அதன் கட்டுப்பாட்டு விலையை சடுதியாக குறைக்கவும் சமகால அநுர அரசினால் முடிந்துள்ளதாகவே பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, கடந்த பல மாதங்களாக நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு நெருக்கடிக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், நீண்ட வரிசைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் இன்றும் காத்திருக்கின்றனர்.
கடவுச்சீட்டுகளைப் பெற மீண்டும் டோக்கன் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதிகாலை நான்கு மணியில் இருந்து நீண்ட வரிசையில் காத்திருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டிருந்த அநுர அலை தற்போது மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளதுடன், அரசின் மீது மக்கள் தமது எதிர்ப்புக்களை வெளிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.