பிரதான செய்திகள்

அறுகம்பை சம்பவம் சுற்றுலாத்துறையை சீர்குலைக்கச்செய்யும் – டலஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை

அறுகம்பை சம்பவம் சுற்றுலாத்துறையை சீர்குலைக்கச்செய்யும் - டலஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை

இலங்கையில் உள்ள சுற்றுலா பகுதிகளை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பிரசாரத்தின் மூலம் இலங்கையில் சுற்றுலாத்துறையை சீர்குலைக்க சதி நடக்கிறதா என்பது குறித்து அரசாங்கம் ஆராய வேண்டும். அதேபோன்று  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தேர்தல் ஏலப் பொருளாக மாற்றாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணித் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

வெளிநாட்டு புலனாய்வு சேவைகள் தமது தூதரகங்கள் மூலம் இலங்கையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக எம்மை எச்சரித்துள்ளன. இலங்கையில் சுற்றுலாத்துறையை மையமாகக் கொண்ட கிழக்கு பிராந்தியம், தென் பிராந்தியம், மேற்கு பிராந்தியம் மற்றும் சுற்றுலா புவியியல் பிரதேசங்களில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு செய்திகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கத் தூதரகம் மற்றும் ஏனைய தூதரகங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பாதுகாப்புப் படையினருக்கு அறிவிக்குமாறு இலங்கை பாதுகாப்புப் படையினரும் மக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான தகவல் ஏற்கனவே பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார். இந்த அறிக்கைகளைப் பார்க்கும்போது, எங்களுக்கு நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன. நாட்டின் பாதுகாப்பு குறித்து அச்சமும் அவநம்பிக்கையும் ஏற்பட்டுள்ளன.

அறுகம்பை சம்பவம் சுற்றுலாத்துறையை சீர்குலைக்கச்செய்யும் - டலஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை

அமெரிக்க தூதரகத்திற்கு இந்த தகவல் வருவதற்கு முன்பே நமது நாட்டின் பாதுகாப்பு படையினரும், புலனாய்வுத்துறையினரும் இந்த விடயத்தை அறிந்திருந்தால், இந்த எச்சரிக்கையை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலிலும் இதுதான் நடந்தது.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அதிக அக்கறை காட்ட வேண்டும். நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், இலங்கையின் சுற்றுலாத்துறையை அழிக்கும் சதி இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து, இது குறித்து அரசாங்கம் பொறுப்புடன் மக்களுக்கு அறிவிக்க வேண்டும். அரச தரப்பில் இருந்து பொறுப்பான எந்த நடவடிக்கையும் இதுதொடர்பில் மேற்கொள்ளப்படவில்லை என்றே நமக்கு தோன்றுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் மிக அதிகமான கருத்துக்களை நாட்டுக்கு முன்வைத்தவர் சஜித் பிரேமதாச. இதற்காக முன்நின்ற முக்கிய அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர். ஒரு கட்சியாகவும் கூட்டணி என்ற ரீதியிலும் நாங்கள் இந்த விடயத்தை மிகவும் பொறுப்புடன் பார்க்கின்றோம். இந்த விடயத்தில் நாங்கள் அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கவில்லை.

எமது நாட்டில் மூன்று தேர்தல்களில் முக்கிய ஏலப் பொருளாக இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலே விற்கப்பட்டது. இப்போது நான்காவது தேர்தல் நடந்து வருகிறது. நான்காவது தேர்தலிலும் இத்தாக்குதல் சில்லறைப் பொருளாக விற்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தேர்தல் ஏலப் பொருளாக மாற்றாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம்  ஐக்கிய மக்கள் கூட்டணியாக கோரிக்கை விடுக்கிறோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் கருவியாகப் பயன்படுத்தாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கம், எதிர்க்கட்சி, கத்தோலிக்க திருச்சபை மற்றும் சிவில் அமைப்புகளின் முதன்மைப் பொறுப்பாக இருக்க வேண்டும். தயவு செய்து இந்த ஒழுக்கக்கேடான விளையாட்டை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

 

Back to top button