76 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் ஒத்திகை நடவடிக்கை காரணமாக இன்று (30) முதல் கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஒத்திகை நடைபெறும் நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், சுதந்திர தின கொண்டாத்திற்காக 3ம் திகதி மதியம் 2 மணி முதல் 4ம் திகதி சுதந்திர தின விழா நிறைவடையும் வரையிலும் இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, காலி வீதியின் சில பகுதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி, காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் காலி முகத்திடல் வரையான பகுதியும் செரமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையிலான பகுதியும் பல கட்டங்களின் கீழ் இன்று முதல் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி வரை மூடப்படவுள்ளன.
இதன்படி, காலி வீதி ஊடாக கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிக்கு பிரவேசிக்கும் பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் பம்பலப்பிட்டி சந்தியில் தெற்கு பக்கம் திரும்பி பௌத்தாலோக்க மாவத்தை, தும்முல்ல சந்தி, தேர்ஸ்டன் வீதி ஊடாக கோட்டை, புறக்கோட்டையை சென்றடைய முடியும்.
புறக்கோட்டையில் இருந்து வெளியேறும் வாகனங்கள் ஓல்கொட் மாவத்தை, தொழில்நுட்ப கல்லூரி சுற்றுவட்டம், சங்கராஜ மாவத்தை, பஞ்சிகாவத்தை வீதி, மருதானை பாலச் சந்தி, காமினி சுற்றுவட்டம் பாதையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளை தவிர்ந்த ஏனைய கனரக வாகனங்கள் வெள்ளவத்தை, W A சில்வா மாவத்தையில் தெற்கு பக்கமாக திரும்பி பழைய ஹெவ்லொக் வீதி, மாயா சுற்றுவட்டம் ஊடாக கோட்டை புறக்கோட்டை பகுதியை சென்றடைய முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.