ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு ரணில் விக்ரமசிங்கவோ அரசாங்கமோ எந்தவித மறைமுக நடவடிக்கையையும் மேற்கொண்டதில்லை. ஆனால் எதிர்க்கட்சியே தேர்தலை பிற்போடுவதற்கான சதித்திட்டங்களை மேற்கொண்டு ரணில் விக்ரமசிங்கவின் மீது குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் உரிய காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க உறுதியாக இருக்கிறார் என ஜனாதிபதியின் தொழில் உறவுகள் ஆணையாளர் சமன் ரத்னப்பிரய தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு ஒரு சிலர் மறைமுகமாக செயற்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் வியாபாரி ஒருவரால் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை கேள்விக்குட்படுத்தி, உயர் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக செயற்பட்டு, ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதை அமைச்சரவையில் உறுதிப்படுத்தியதுடன், உயர் நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கை செல்லுபடியற்றதாக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கி இருந்தார். அதன் பிரகாரம் குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
ஆனால் குறித்த வழக்கு தாக்கல் செய்த நபர், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஒருவரின் நெருங்கிய நண்பர். இதன் மூலம் தேர்தலை பிற்போடுவதற்கு சதித்திட்டங்களை மேற்கொள்பவர்கள் யார் என்பதை புரிந்துகொள்ளலாம். அதேபோன்று தற்போது மீண்டும் தேர்தலை பிற்போடும் நோக்கில் சட்டத்தரணி ஒருவரால் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கும் உயர் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.
இவ்வாறு நாட்டுக்குள் குழப்பகரமான நிலைமை ஒன்றை ஏற்படுத்தி, அதனை ரணில் விக்ரமசிங்கவின் மேல் சுமத்துவதற்கான நடவடிக்கையே இடம்பெற்று வருகிறது.
தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதை தடுப்பதற்கும் அவர் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதற்குமே இவ்வாறான நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதனால் ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க உறுதியாக இருக்கிறார். அவர் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவார். அதேபோன்று பெரும்பான்மை வாக்குகளால் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவதை சஜித், அநுர யாராலும் தடுக்க முடியாது என்றார்.
, பெரும்பான்மை வாக்குகளால் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவதை சஜித், அநுர யாராலும் தடுக்க முடியாது !!