Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsபிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பொருத்தமான வலுவான பொருளாதார முறைமை நாட்டுக்குள் கட்டியெழுப்பப்படும் : ஜனாதிபதி !

பிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பொருத்தமான வலுவான பொருளாதார முறைமை நாட்டுக்குள் கட்டியெழுப்பப்படும் : ஜனாதிபதி !


பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வலுவான பொருளாதார முறைமையொன்று கட்டியெழுப்படும் என்றும், அந்த முறைமை குறுகிய காலத்திற்கானதாக அன்றி நீண்ட காலத்திற்கு நாட்டின் பொருளாதாரம் சரிவடையாமல் பாதுகாக்கும் வகையில் வலுவாக கட்டமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று  (13) நடைபெற்ற நவீன வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்னர் தேசிய ரீதியில் சிந்தித்துச் செயற்படக்கூடிய அரசியல் குழுவொன்று நாட்டுக்கு கிடைத்திருப்பதாகவும், 05 வருடங்களில் ஆட்சி மாற்றம் செய்வது குறித்து சிந்திப்பதற்கு மாறாக தேசிய மட்டத்தில் சிந்தித்துச் செயற்படக்கூடிய அரசியல் முறைமையே எதிர்காலத்திலும் நாட்டுக்குத் தேவைப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பெயர் பலகையை திரைநீக்கம் செய்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை மாணவர் பாவனைக்காக ஜனதிபதி திறந்து வைத்தார்.

அதனையடுத்து நீச்சல் தடாகம் அமைந்திருக்கும் பகுதியை அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு கையளிக்கும் நிகழ்வும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

2023 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி சிறப்புச் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கான சான்றிதழ்களையும் பரிசுகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது வழங்கி வைத்தார்.

அனுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தினால் ஜனாதிபதி நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட 10,000 ரூபா பாடசாலையின் அதிபர் பேர்ஸி மஹாநாமவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”சீ.டபிள்யூ.டபிள்யூ. கண்ணங்கராவினால் மேற்கொள்ளப்பட்ட கல்வி மறுசீரமைப்புக்கு அமைவாக வடமேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்றாக இந்த பாடசாலையும் விளங்குகிறது.

இன்றளவில் பாடசாலை அபிவிருத்தி கண்டுள்ளது. இந்த பாடசாலைக்கு புதிய மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றை அதிபர் கோரினார். அதனைப் பெற்றுக்கொடுக்குமாறு கல்வி அமைச்சுக்கு அறிவிப்பேன்.

நீச்சல் தடாகத்தை நிர்மாணிக்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருப்பதால் பாடசாலையின் 77 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவிற்கு வரும் வேளையில் முழுமையான வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையமொன்றை அமைத்துத்தர ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பாடசாலை குறித்து இங்கு பேசிய மாணவர்கள் தங்களுக்கு சிறந்த எதிர்காலமொன்று தேவை என்பதை கூறினர். கடந்த இருவருடங்களைத் திரும்பிப் பார்க்கும் போது அந்த கோரிக்கை நியாயமானதாகும். நாம் எதிர்காலத்தை எவ்வாறு கட்டியெழுப்ப முடியுமென சிந்திக்க வேண்டும். நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டிருப்பதால் எதிர்காலத்துக்கான முதல் அடியை வெற்றிகரமாக வைத்திருக்கிறோம்.

தற்போது பின்பற்றும் பொருளாதார முறைமைகள் மூலம் முன்னேற்றத்தை அடைய முடியாது. இதனால் ஒரு நாடு என்ற வகையில் மேலும் கடன் படுவதை மாத்திரமே செய்ய முடியும். அவ்வாறு செய்தால் இந்த பிள்ளைகள் எதிர்பார்க்கும் சிறந்த எதிர்காலமும் கிடைக்காது. அதேபோல் இன்னும் 15 வருடங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும். அதனால் நாடாக முன்னோக்கிச் செல்வதா? மீண்டும் பொருளாதாரம் சரிவடைய இடமளிப்பதா என்பதை தீர்மானிக்க வேண்டும். இங்கிருக்கும் பிள்ளைகள் இன்னும் 50 வருடங்களுக்கு மேலாக வாழப் போகிறீர்கள். அதனால் அரசாங்கம் என்ற வகையில் நாம் 2050 பற்றி சிந்திக்காமல் 2075 வரையில் தூர நோக்குடன் சிந்திக்க வேண்டியது அவசியம்.

அதனாலேயே நாட்டின் இறக்குமதி பொருளாதாரத்தை ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்ற எதிர்பார்க்கிறோம். நாட்டில் பல முறைமைகள் மாற்றப்பட வேண்டும். அதற்காகவே பொருளாதார மாற்றச் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்போது விவசாய நவீனமயம்மால் திட்டம் மிக முக்கியமானது. நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் இயலுமை விவசாயிகளுக்கே உள்ளது. அதற்காகவே அவர்களுக்குத் தேவையான உரத்தைப் பெற்றுக்கொடுக்க முதலில் நடவடிக்கை எடுத்தோம். விவசாயிகள் கடந்த 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நல்ல விளைச்சலை பெற்றுத்தந்தனர். அவர்களுக்கு நன்றி கூறும் வகையிலேயே ‘உறுமய’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இலவச காணி உறுதிகள் வழங்கப்படுகிறது. இதன்போது வடமேல் மாகாண மக்களுக்கு பெரும் சேவை ஆற்றப்படும்.

எதிர்வரும் காலத்தில் உலக சனத்தொகை 02 பில்லியன்களால் அதிகரிக்கப்போகிறது. 2050களில் 02 பில்லியனுக்கும் அதிகளவானர்களுக்கு உணவு தேவை இருக்கும். உலகத்தின் உணவு தேவையைப் பூர்த்தி செய்ய நாம் புதிய தொழில்நுட்பத்துடன் இயன்றளவு அதிக உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும். இந்த உலர் வலயத்தில் மாத்திரம் நாம் அரிசி உற்பத்தியில் தன்நிறைவு காண முடியும். விவசாயிகளுக்கு செழிப்பு கிடைக்கும் போது அவர்களின் பணம் அநுராதபுரம், தம்புள்ளை, வவுனியா போன்ற பகுதிகளுக்கு வந்து சேரும். அதனால் அந்த நகரங்களும் அபிவிருத்தி அடையும்.

அதேபோல் இந்த மாகாணத்தில் சூரிய சக்தி வேலைத்திட்டத்தையும், சுற்றுலா வர்த்தகத்தையும் வலுப்படுத்தும் இயலுமை உள்ளது. புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும். திருகோணமலை அபிவிருத்தி வேலைத் திட்டத்துக்காக இந்தியாவுடன் கைகோர்த்திருக்கிறோம். அதன் பலன்கள் அநுராதபுரத்துக்கும் கிடைக்கும்.

அதேபோல் நாம் புதிய பல்கலைக்கழகமொன்றை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். அதனால் புதிய மூன்று தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் கிடைக்கும். தொழில்நுட்பத் தெரிவுகளை வழங்க வௌிநாட்டு பல்கலைக்கழங்களும் முன்வந்துள்ளன. நாம் புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவுடன் முன்னேற வேண்டும். எதிர்காலத்திற்காக புதிதாக சிந்திக்க வேண்டும்.

சில அரசியல் வாதிகள் 05 வருடங்களில் ஆட்சி மாற்றம் செய்வதை பற்றி சிந்திக்கிறார்கள். இல்லாவிட்டால் அதிகாரத்தில் இருப்பவரை விரட்டியடுப்பது குறித்து சிந்திக்கிறார்கள். இவ்வாறான அரசியலின் பலனாகவே நாட்டின் பொருளாதாரம் சரிவு கண்டது. அதனால் நாட்டின் பொருளாதார நிலைமையும் சரிவடைந்தது. அனைத்து அரசியல் கட்சிகளினதும் பிரநிதிநிதிகளை இணைந்துக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடிந்தது.

அதன்படி இந்நாட்டில் முதல் முறையாக தேசிய மட்டத்தில் சிந்திக்ககூடிய அரசியல் குழுவொன்று உருவானது. எந்த அரசியல் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் நாட்டை பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். அடுத்த ஐந்து வருடங்களில் ஒரு நாடாக நாம் முன்னேற போகிறோமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். அதனால் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து செயலாற்றுவோம்.” என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

, பிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பொருத்தமான வலுவான பொருளாதார முறைமை நாட்டுக்குள் கட்டியெழுப்பப்படும் : ஜனாதிபதி !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்