அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பெண்ணொருவர் வவுனியா பிரதேசத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது சகோதரியின் ஊடாக அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாக கூறி 10 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு உறுதியளித்தப்படி வேலை வாங்கித் தரவில்லை என கம்பஹா பிரதேசவாசி ஒருவர் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார்.
சந்தேகநபரான பெண் மீது பணியகத்திற்கு 5 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதையடுத்து, அதன்படி செயற்பட்ட விசாரணை அதிகாரிகள் குறித்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று கைது செய்துள்ளனர்.
முறைப்பாடுகளின் படி, பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் உண்மைகளை அறிக்கையிட்டு, குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
விசாரணையின் போது, அவர் நாட்டில் உள்ள ஒரு பிரபலமான காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகின்றமை தெரியவந்துள்ளதாக பணியக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இம்மாதம் 7ஆம் திகதி வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
, அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த பெண் கைது !