சமூக ஊடகங்கள் வாயிலாக பிரபல நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் பல்வேறு வங்கிகள், வணிக நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி நன்கொடைகள், பணப் பரிசுகள், வெற்றிகள், வேலைவாய்ப்பு போன்றவற்றைப் பெறுவதற்கு உடனடியாக பதிவுசெய்துக் கொள்ளுமாறு பகிரப்படும் போலி தகவல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.
போலி இணையதளங்கள், சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி மற்றும் வட்ஸ்அப் செயலி மூலம் பகிரப்படும் போலி தகவல்கள் வாயிலாக இணைய மோசடியில் ஈடுபடுபவர்கள்அதன் வாயிலாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள்.
போலி செய்தியின் இணைப்புகளை அணுகுவதன் மூலம் மோசடிக்காரர்கள் தங்களுடன் இணைக்கப்பட்ட நபர்களின் கணினி, தொலைப்பேசியில் உள்ள தகவல்களைத் திருடி முறைகேடான மற்றும் பண மோசடியில் ஈடுபடுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இவ்வாறான மோசடிகள் அதிகரித்து வருவதுடன், இவற்றால் பாதிப்புக்குள்ளாகுவோரின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. குறித்த மோசடிக்காரர்கள் தேசிய மற்றும் சமய விழாக்களின் போது இதுபோன்ற செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. பொது மக்களின் அறியாமையும் அலட்சியமும் இவ்வாறன குற்றங்கள் சமூகத்தில் அதிகரிப்பதற்கு சாதகமாக அமைந்துள்ளன.
சந்தேகத்திற்கிடமான தகவல்கள் ஏதேனும் கிடைக்கப்பெறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்லது உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அவர்களை தொடர்புக் கொண்டு அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு உறுதிப்படுத்த முடியாத செய்திகளை அணுகுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.
, சமூக ஊடகங்கள் வாயிலாக மோசடி : பொதுமக்களே எச்சரிக்கை !