அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும் சில அரசியல் மூடர்களின் விளையாட்டுக்கள் இன்னும் இரண்டே மாதங்களில் நிறைவடையவுள்ளன. உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக விஜேதாச ராஜபக்ஷவை களமிறக்கி வெற்றி வாகை சூடுவோம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கண்டியில் திங்கட்கிழமை (24) சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கட்சி தலைவராக செயற்படுவதற்கே நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. மதறாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அல்ல. எனவே நாம் எமது வழமையான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் இல்லை. சில அரசியல் மூடர்களின் விளையாட்டுக்கள் இன்னும் இரண்டே மாதங்களில் நிறைவடையவுள்ளன. அதன் பின் அவர்கள் எங்கு ஓட்டமெடுப்பார்கள் என்று தெரியாது.
அரசியலில் யாருடைய வாயையும் எம்மால் மூட முடியாது. கட்சி யாப்பிற்கமைய தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுபவர்களுக்கு சுதந்திர கட்சியில் எந்த உரிமையும் கிடையாது. எமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை. தடையுத்தரவும், இடைக்கால தடையுத்தரவும் மாத்திரமே பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஊடகங்களும் மக்கள் மத்தியில் சரியான தகவல்களை கொண்டு செல்வதில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். யாப்பிற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்மிடமே காணப்படுகிறது என்பதை ஆதரவாளர்களிடம் கூறிக் கொள்கின்றேன். அராசங்கத்துடன் உள்ளவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. விரைவில் தற்போதுள்ளவர்களின் அதிகாரங்கள் காணாமல் போகும். எனவே தேர்தலுக்கு தயாராகுமாறு சு.க. ஆதரவாளர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சில அரசியல்வாதிகள் இணைந்து என்னை கொல்லாமல் கொல்கின்றனர். நான் குண்டுத் தாக்குதல் நடத்தினேனா? ஆயுதங்கள் தயாரித்தேனா? வெடி மருந்துகள் உற்பத்தி செய்தேனா? குண்டு தாக்குதல்களை நடத்தி சிறையிலுள்ள நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்பில் எவரும் பேசுவதில்லை.
நான் தான் அனைவருக்கும் பிரச்சினையாகவுள்ளேன். எது எவ்வாறிருப்பினும் உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர கட்சி வேட்பாளராக நாம் விஜேதாச ராஜபக்ஷவை சுதந்திர கட்சி வேட்பாளராகக் களமிறக்கி, வெற்றி வாகை சூடுவோம் என்றார்.
, சில அரசியல் மூடர்களின் விளையாட்டுக்கள் இன்னும் இரண்டே மாதங்களில் நிறைவடையவுள்ளன : மைத்திரி!